Header Ads



இலங்கை வரும் மோடிக்கு, குளவிகளால் ஆபத்து..!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதி, மலையகத்தில் குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரும் மே 11ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே 12ஆம் நாள் ஹற்றனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன் போது, மலையகப் பகுதிகளில் உள்ள குளவிகளால் இந்தியப் பிரதமருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, மலையகத்தில் சில பகுதிகளில் உள்ள குளவிக் கூடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருக்குப் பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்புப் பிரிவுகள், ஹற்றன் காவல்துறை கண்காணிப்பாளர் பணியகத்துடன் இணைந்து, குளவிகளை பாதுகாக்கும் அமைப்பின் உதவியுடன் குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.

மலையகப் பகுதிகளில் உள்ள பாரிய மரங்களில் பெருமளவில் குளவிகள் கூடுகளைக் கட்டியுள்ளன. இந்தியப் பிரதமரின் பயணத்தின் போது, அதிகளவு உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஒரே நேரத்தில் பல உலங்கு வானூர்திகள் தரையிறக்கப்படும் போது, மரங்களில் கூடுகளை அமைத்துள்ள குளவிகள் கலைந்து தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

பெருமளவு மக்கள் கூடும் இடத்தில் குளவிகள் தாக்குதல் நடத்தினால் பாரிய நெருக்கடி ஏற்படும் என்பதாலேயே, தொழில்நுட்ப உதவிகளுடன் குளவிக் கூடுகளை அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.