Header Ads



பேஸ்புக்கை குழந்தை வளர்ப்புக்கு, பயன்படுத்தும் பெற்றோர்கள்


“அன்று இரவு பதினொரு மணி இருக்கும். திடீரென என் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. நீண்ட நேரமாகியும் அழுகையை நிறுத்தவில்லை. பெங்களூரிலிருக்கும் அம்மாவுக்குப் போன் செய்தால், சுவிட்ச் ஆஃப். கணவரும் நைட் ஷிஃப்ட் போய்விட்டார். அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் துடித்துப்போனேன். உடனே ஃபேஸ்புக்கில் என் தோழியைத் தொடர்புகொண்டேன். அவள் ஆன்லைன் வழியாகவே சில டிப்ஸ்களைச் சொன்னாள். அதைப் பின்பற்றியதும் குழந்தை அழுகையை நிறுத்தியது. அப்போது, எனக்கும் என் தோழி பாரதிக்கும் தோன்றியதுதான் 'நேச்சுரல் பேரண்டிங் டீம்' ஐடியா.” 

குழந்தை வளர்ப்பு

பேஸ்புக்கில் 'நேச்சுரல் பேரண்டிங்' என்ற குழுவை ஆரம்பித்ததற்கான முன்கதைச் சுருக்கம் சொல்கிறார் ஐஸ்வர்யா. ஓர் இரவில் தோன்றிய ஐடியாவை மறுநாளே செயல்படுத்தியிருக்கிறார்கள். இப்போது, நான்காவது வருடத்தைத் தொட்டிருக்கும் இந்தக் குழுவில் சென்னையில் மட்டும் மூன்றாயிரம் தாய்மார்கள் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

''அட என்னங்க... தொட்டதுக்கெல்லாம் ஃபேஸ்புக்கா? குழந்தையை வளர்க்கவும் குரூப்பா” என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான விளக்கத்தையும் குரூப் அட்மின்களே கொடுக்கிறார்கள். 

“குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயம் இல்லீங்க. நான் பிறந்ததும் என்னை அம்மாவும் பாட்டியும்தான் சேர்ந்து வளர்த்தாங்க. பாட்டியின் அரவணைப்பும் கைப்பக்குவமும் எனக்குக் கிடைச்சது. குழந்தை எதுக்காக அழுவுதுன்னு அது அழுவும் தொனியை வெச்சே பாட்டிகளால் கண்டுபிடிச்சிட முடியும். ஆனால், சென்னை போன்ற மெட்ரோ சிட்டியில் வாழும் என் குழந்தைக்குப் பாட்டியின் பராமரிப்பு கிடைக்கலை. டெலிவரி சமயத்தில் அம்மா பார்த்துக்கிட்டாங்க. தொடர்ந்து அவங்களாலும் என்னோடு இருக்க முடியாத சூழல். நானும் என் கணவரும்தான் குழந்தையைப் பார்த்துக்கறோம். 

பெற்றோர்

ஐ.டியில் வொர்க் பண்ற என்னை மாதிரியான பெண்களுக்கு ஒரு பக்கம் குழந்தையோடு வீட்டையும் பராமரிக்கணும். சேம் டைம் ஆபீஸ் டார்கெட்டையும் முடிக்கணும். எல்லா வேலைகளில் இருக்கும் பெண்களுக்கும் இதே நிலைதான். நமக்கு ஏதாவது டவுட் வந்தாலோ, மன அழுத்தம் ஏற்பட்டாலோ யாராவது ஆறுதலா பேசினாலே போதும். வலிக்கு மருந்து கிடைச்ச மாதிரி இருக்கும். அப்படியான சில விஷயங்களைப் பேசுறதுக்கும் சந்தேகங்களை கேட்குறதுக்கும் கவலையை மறந்து சிரிக்கிறதுக்குமான தளம்தான் இந்த குரூப்'' என்கிறார் அட்மின்களில் ஒருவரான ஐஸ்வர்யா. 

“எங்க டீமில் டாக்டர்ஸ், லாயர்ஸ், சைக்காலஜிஸ்ட்னு பலரும் இருக்குறாங்க. யாருக்கு என்ன சந்தேகம்னாலும் உடனடியா விளக்கம் கொடுத்துடுவாங்க. திடீர்னு ஒரு பெண், தனக்குத் தாய்ப்பால் கட்டிடுச்சுன்னு சொன்னாங்கன்னா, உடனே குரூப்ல இருக்கும் டாக்டர் அதற்கு தீர்வு சொல்வாங்க. கணவன், மனைவிக்குள்ளே சண்டைன்னா வழக்கறிஞரோ, சைக்காலஜிஸ்ட்டோ அட்வைஸ் பண்ணுவாங்க. அதேபோல அனுபவ ரீதியா கத்துக்கிட்டதை மற்றவர்கள் ஷேர் பண்றோம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவம் இருக்கும். அதை மத்தவங்ககிட்ட சொல்வதால் தீர்வு கிடைக்கும்.

அதோடு குழந்தைகளை எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம், அவங்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கொடுக்கலாம், எந்த சீசனுக்கு எங்கே அழைச்சுட்டுப் போகலாம்னு எங்களுக்குள்ளே ஷேர் பண்ணிக்கிறோம். இந்த குரூப் மூலம் எங்களுக்குப் பல சொந்தங்கள் கிடைச்சிருக்காங்க. அப்பார்ட்மென் சூழலில் வாழும் எங்கள் குழந்தைகளுக்கும் நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க” என்கிற பாரதி முகத்தில் புன்னகை ததும்புகிறது. 

ஃபேஸ்புக் போன்ற தகவல்தொழில்நுட்பத்தை சிலர் தவறாகப் பயன்படுத்தும் சூழலில், இதுபோன்ற ஆரோக்கியமான குழுக்கள் நம்பிக்கையை விதைக்கின்றன.

No comments

Powered by Blogger.