Header Ads



இமான் அகமது அபுதாபி, ஆஸ்பத்திரியில் அனுமதி

எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது 37). இவருக்கு 11 வயது ஆனபோது பக்கவாத நோயாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். யானைக்கால் நோய் மற்றும் உடலில் சுரப்பிகள் சுரக்காததால் அவர் மிகவும் குண்டானார்.

படுக்கையிலேயே சுமார் 25 ஆண்டுகள் கழிந்தநிலையில், தற்போது எமான் 500 கிலோ எடையுடன் உள்ளார். இவர் உலகிலேயே மிகவும் குண்டான பெண்ணாகவும் கருதப்படுகிறார்.

எமான் தனக்கு உடல் பருமனை குறைக்க தேவையான சிகிச்சை அளிக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த டாக்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் யாரும் முன்வரவில்லை. அவருக்கு மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால் உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை இலவசமாக செய்ய முன்வந்தார்.

எமானுக்கு உடனடியாக மருத்துவ விசா வழங்க உதவுமாறு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு டாக்டர் முப்பஷால் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இதன்மூலம் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து எமான் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் மும்பை அழைத்துவரப்பட்டார்.

இதற்காக விமானத்தில் சிறப்பு படுக்கை தயாரிக்கப்பட்டு இருந்தது. முன்எச்சரிக்கையாக அனைத்து அவசரகால மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களும் விமானத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

மும்பை விமான நிலையம் வந்தடைந்த எமான் அவசரகால மருத்துவ வசதியுடன் வடிவமைக்கப்பட்டு இருந்த லாரியில் ஏற்றப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு காலை 6 மணிக்கு கொண்டுவரப்பட்டார். 

பின்னர், அவர் லாரியில் இருந்து கிரேன் மூலம் கீழே இறக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அவருக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக அறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். கடந்த மார்ச் 7-ம் தேதி நடைபெற்ற சிக்கலான அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த ஆஸ்பத்திரியில் எமானுக்கு 3 மாதங்கள் உடல் எடை குறைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு துணையாக அவரது சகோதரி சைமாவும் உடன் வந்திருந்தார். இந்த சிகிச்சையின் மூலம் தனக்கு நிச்சயம் தகுந்த பலன் கிடைக்கும் என்று எமான் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப, இந்த சிகிச்சையின் மூலம் அவரது உடல் எடையில் 323 கிலோவரை குறைந்து, தற்போது 176.6 கிலோ எடையுடன் உள்ள எமான் அகமது தற்போது தொடர் மேல் சிகிச்சைக்காக அபுதாபியில் உள்ள வி.பி.எஸ். புர்ஜீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் எடையை மேலும் குறைக்கவும், மீண்டும் எடை கூடிவிடாதபடி சிறப்பு சிகிச்சை அளிக்கவும் இந்த துறையை சேர்ந்த 20 சிறப்பு டாக்டர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி யாசின் எல் ஷஹாத் தெரிவித்துள்ளார்.

எளிதாக கழிப்பறையை பயன்படுத்துவது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு பிசியோ தெராபி பயிற்சி முறைகளும் அவருக்கு அளிக்கப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.