Header Ads



இலங்கையில் இன்று, மிகப்பெரும் பலப் பரீட்சை

தொழிலாளர் நாளான மே நாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் நிலையில், சிறிலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் தமது பலத்தை வெளிப்படுத்தும் பிரமாண்ட பேரணிகளை நடத்தவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மேநாள் பேரணி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கம்பல் பூங்காவில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மே நாள் பேரணி, கண்டி கெட்டம்பே மைதானத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

அதேவேளை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் மேநாள் பேரணி, கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.

அரசியல் கட்சிகளின் பலத்தை பரிசோதிக்கும் களமாக மாறியுள்ள இந்த மே நாள்  பேரணிகளுக்கு 20 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு அளி்க்கவுள்ளனர்.

ஜேவிபியின் மே நாள் பேரணி கொழும்பு பிஆர்சி பூங்கா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஜேவிபி, உள்ளிட்ட சில கட்சிகளின் மே நாள் பேரணிகள் இடம்பெறவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மே நாள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் மாகாணசபைத் தேர்தல்கள், உள்ளூராட்சித் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிரணிக்கும் இடையில் நடக்கின்ற பலப்பரீட்சையினாலும், இம்முறை மே நாள் பேரணிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் 20 இலட்சம் பேரைத் திரட்டி பலத்தை நிரூபிக்கப் போவதாக கூட்டு எதிரணி சவால் விடுத்துள்ளது. எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி கண்டி மே நாள் பேரணியில் பெருமளவானோரை அணிதிரட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஐதேகவும் தனது பலத்தை நிரூபிக்க கங்கணம் கட்டியுள்ளதால், பொதுமக்களை கண்டிக்கும், கொழும்புக்கும் ஏற்றி வரும் பணியில் ஆயிரக்கணக்கான பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கண்டியில் நடக்கும் பேரணிக்கு ஆட்களை ஏற்றி வருவதற்கு இஇலங்கை போக்குவரத்துச் சபையின் 1,832 பேருந்துகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி வாடகைக்கு அமர்த்தியுள்ளது.

அதேவேளை, கொழும்பில் நடக்கும் பேரணிக்கு ஆட்களை ஏற்றி வரும் பணிக்காக 1,432 இபோச பேருந்துகளை ஐதேக வாடகைக்கு அமர்த்தியுள்ளது.

கூட்டு எதிரணி காலி முகத்திடல் பேரணிக்காக இபோசவின் 22 பேரந்துகளை மாத்திரம் வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஜேவிபி 209 பேருந்துகளை இபோசவிடம் வாடகைக்கு பெற்றுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐதேகவும் இரண்டு தொடருந்துகளையும் மே நாள் பேரணிக்காக வாடகைக்கு அமர்த்தியிருக்கின்றன.

No comments

Powered by Blogger.