Header Ads



சிங்களவர்களை உசுப்பிவிட்டு, ஆட்சியைப் பிடிக்க மஹிந்த முயற்சி

புலிகள் மீண்டும் எழுச்சி பெறப்போகின்றார்களென தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களை உசுப்பிவிட்டு இழந்த ஆட்சியைப் பிடிக்க மஹிந்த ராஜபக்‌ஷ முயற்சிக்கிறார். எனினும், வடக்கில் மீண்டுமொரு ஆயுதப் புரட்சி ஏற்படாது. இதற்கு ஒருபோதும் ஜே.வி.பி இடமளிக்கமாட்டாதென ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டை பிச்சையெடுக்கும் நாடாக மாற்றிய ஆட்சியாளர்களைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களுக்கான ஆட்சியை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் தோன்றியுள்ளது. இந்த மாற்றத்துக்கான தலைமைத்துவத்தைக் கொடுக்க ஜே.வி.பி தயாராக இருப்பதாகவும் நேற்று கொழும்பில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் அவர் கூறினார். ஜே.வி.பி ஏற்பாடு செய்திருந்த செம்மேதினக் கூட்டம் கொழும்பு பீ.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்றது. தெஹிவளை

மகேஸ்வரன் பிரசாத் எச்.டி.எஸ். ஜயசிங்க மைதானத்திலிருந்து ஆரம்பமான மேதின பேரணி ஆயிரக்கணக்கானவர்களின் பங்களிப்புடன் பீ.ஆர்.சி மைதானத்தை வந்தடைந்தது. அங்கு மேதினக் கூட்டம் நடைபெற்றதுடன், இதில் கியூபா, கிரேக்கம், பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இடதுசாரிக் கட்சிகளின் மத்தியகுழு உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தனர்.

மைதானம் நிறைந்திருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜே.வி.பி தலைவர், கடந்த 69 வருடங்களாக மாறி, மாறி ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியாகவும், சுற்றாடல் ரீதியாகவும் நாட்டை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றிருப்பதுடன், சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கும் நிலைக்கு நாட்டை முன்நடத்திச் சென்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். நாட்டு மக்களை கௌவரமானவர்களாக வாழவைப்பதற்குப் பதிலாக இழிவானவர்களாக வாழ்வதற்கான வழிகளையே இவர்கள் ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷ சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்களை உசுப்பிட்டு தேசப்பற்றை வெளிக்காட்ட முயற்சிக்கும் அதேநேரம், ரணில் விக்ரமசிங்க நாட்டுக்குச் சொந்தமான அரிய வளங்களை வெ ளிநாடுகளுக்கு விற்பதில் தீவிரம் காட்டியுள்ளார். மறுபக்கத்தில் மைத்திரிபால சிறிசேன பயத்தின் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தாது பின்னடித்து வருகின்றார். தேர்தலை நடுத்துவாராயின் அத்துடன் அவருடைய ஜனாதிபதி பதவி இல்லாமல் போகும் என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்துள்ளதாகவும் ஜே.வி.பியின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடுகள் மிகவும் குறைவாக காணப்படுகின்றன. ஜனாதிபதிக்கு இரண்டு கார்களைக் கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் 5740 கோடி ஒதுக்கியுள்ளனர். அதேநேரம், பிரதமருக்கு இரண்டு கார்களை கொள்வனவு செய்ய 5930 கோடியை ஒதுக்கியுள்ளார்கள். மறுபக்கத்தில் மீதொட்டமுல்லவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வெறும் ஒரு இலட்சம் ரூபாவே நஷ்டஈடு வழங்கப்படுகிறது. இவர்களின் ஒரு காருக்கு செலவாகும் பணத்தை சமப்படுத்த மீதொட்டமுல்லவில் 3000 பேர் உயிரிழக்கவேண்டும். ஜனாதிபதி தனது வீட்டிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பாராளுமன்றத்துக்கு ஹெலிகொப்டரில் செல்கின்றார். தற்பொழுது இருக்கும் ஆட்சி ஆட்சியாளர்களுக்கான ஆட்சியாகும். அவர்கள் பொது மக்கள் பற்றி கவலைப்படுவதில்லை.

மஹிந்த ராஜபக்‌ஷ புலிகள் மீண்டும் புத்துயிர் பெறப்போகின்றார்கள் எனக் கூறி தனது இழந்த அதிகாரத்தைப் பெற முடியுமென முயற்சிக்கின்றார். இதற்கு வடக்கிலும் சிலர் ஆதவளிக்கும் வகையில் செயற்படுகின்றனர். எனினும், யுத்தத்தில் ஏற்பட்ட பிரதிபலன் காரணமாக வடக்கில் மீண்டுமொரு ஆயுதப்புரட்சி ஏற்படாது. அவ்வாறு ஒரு புரட்சி ஏற்படுவதற்கு ஜே.வி.பி ஒருபோதும் இடமளிக்காது. யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக மே தினத்தை நடத்தி இந்த செய்தியையே தாம் அங்கு கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊழியர் சேமலாப நிதியைப் பயன்படுத்தி மேற்கொண்ட முதலீடுகள் காரணமாக 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மாதந்தம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு 21 மாதங்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மறு பக்கத்தில் பெர்ப்பர்ச்சுவல் நிறுவனத்தின் இலாபம் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஊழியர் சேமலாப நிதியத்தால் ஈட்டப்படும் வருமானத்துக்கு 10 வீத வரியை அறவிட்டு அதனை திறைசேரிக்குப் பெற்றுக் கொள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முயற்சிக்கிறார். இந்த முயற்யை நாம் தோற்கடிப்போம்.

இவ்வாறு நாட்டையும் நாட்டு மக்களையும் இழிவான நிலைக்கு இட்டுச் சென்றுள்ள ஆட்சியாளர்களை மாற்ற வேண்டிய காலம் கனிந்துள்ளது. இந்த மாற்றத்தை ஜே.வி.பியினால் மாத்திரம் ஏற்படுத்த முடியாது. இதற்கு கிராம மட்டத்திலிருந்து மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. இந்த மாற்றத்துக்கான தலைமைத்துவத்தை வழங்க ஜே.வி.பி தயாராக இருப்பதுடன், பாரிய மக்கள் முன்னணியுடன் இம்மாற்றத்தை ஏற்படுத்துவோம். தமது இந்த நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக் கொள்ளும்வரை மக்களிடம் சென்று இதனைக் கூறப்போவதாகவும் அவர் மேலும் கூறினார். 

No comments

Powered by Blogger.