May 26, 2017

இனவாத அலையை இல்லதொழிக்க, இறைவனின் ஏற்பாடோ அடைமழை..?

திடுதிப்பென அதிகரித்து வந்த இனவாத முறுகல் நிலைமைகள் எங்கு போய் முற்றுப் பெருமோ என்ற அச்ச உணர்வுகள் அதிகமானவர்களின் உள்ளத்தில் பீதி உணர்வை துளிர்விடச் செய்தது என்பதுவே நிதர்சனம்.

ஒவ்வொரு விடியலின் போதும் ஏதோ ஒரு ஊரில் பள்ளிவாயலுக்கு பெற்றோல் பொம் தாக்குதலாம், ஒரு வியாபார ஸ்தலம் தீக்கிரையாம் எனும் துயரச் செய்திகளுடனே விழித்தெழும் நிலைமை சில இனவாத கும்பல்களால் உருவாக்கப்பட்டிருந்தது.

இனவாதிகளின் அவதூறுப் பிரச்சாரம் சூடுபிடித்து பெரும்பான்மை இன மக்களின் அகங்களை கருகச் செய்ய ஆரம்பித்துள்ள இத்தருணத்திலேயே “அடைமழை” யின் அனர்த்தச் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன.

அடைமழை அனர்த்தத்தில் இது வரை 32 பேர் பலியாகி பலர் காணாமல் போயுள்ளனர். வெள்ளம், மண் சரிவு என்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மீட்புப் பணியிலும், உதவிப் பணியிலும் அரச - அரச சார்பற்ற பல அமைப்பினர்கள் களம் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
விஸ்வரூபமாய் உருவெடுத்த இனவாத அலையினை தடுக்கும் அரணாக அல்லாஹ் அடைமழையினை ஏற்படுத்தி விட்டானோ? என்று இந்த இடத்தில் நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

அனர்த்தம் என்பது இனம் - மதம் பார்த்து வருவதில்லை. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நட்டாற்றில் தவிக்கும் அன்பர்களின் துயர் துடைக்கும் நற்பணியில் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அன்பரும் தனது பங்களிப்பினை நல்க வேண்டியது காலத்தின் இன்றியமையா தேவையாகும்.

கருக்கொண்டு வரும் இனவாத கருத்துக்களை அழித்து, முஸ்லிம்கள் என்போர் மனித நேயர்களே எனும் கருத்தை நிலை நாட்டுவதற்கான அருமையான சந்தர்ப்பமாக இதனை நாம் திட்டமிட்டு பயன்படுத்துதல் வேண்டும்.

இயக்க, கட்சி, பிரதேச வேறுபாடுகளை தாண்டி மனிதம் காக்கும் மகத்தான பணியில் நாம் களம் குதிக்க வேண்டும். எமது சீரிய செயற்பாடுகளால் பிற அன்பர்களின் அகங்களை வென்றெடுப்பதற்கான மகத்தான முயற்சியினை இப்புள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கான தக்க தருணமாய் அனர்த்தத்தை பயன்படுத்துவோம்.

திட்டமிடல், உரிய கட்டமைப்பு, வளங்களை ஒன்று திரட்டுதல், மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உளவளத்துறை ஆலோசனை, பரீட்சைகளை எதிர் கொள்ள காத்திருந்த மாணாக்களின் அழிந்து போன பாடக்குறிப்புகளுக்கான மாற்றீடு, இன்ன பிற உதவி ஒத்தாசைகள் என எமது சமூகத்தின் “அனர்த்த உதவிகள்” நெறிப்படுத்தப்படல் வேண்டும்.

அழிவை நினைத்து வருந்துவதை விட்டு, பாரிய அழிவிலிருந்து தேசத்தை காப்பதற்கு இறைவன் வழங்கிய வரப்பிரசாதமாக இதனை எடுத்து செயற்படுத்தினால் பல்லாயிரம் உள்ளங்களில் நல்லெண்ண விதைகளை விருட்சமாக்க முடியும்.
சிந்திக்குமா நம் சமூக தலைமைகள்?

 - M.T.M.பர்ஸான்

2 கருத்துரைகள்:

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.
(அல்குர்ஆன் : 42:30)
www.tamililquran.com

LESSON AND UNDERSTAND FOR YAHAPALANA.

Post a Comment