Header Ads



புயலைக் கிளப்பிய, பொன்சேக்கா விவகாரம் - கடிந்து கொண்ட ஜனாதிபதி

அமைச்சரவையில் பேசப்படும் விடயங்கள் தொடர்பில் பொறுப்புடன் பேசுங்கள் என்று அமைச்சர்களைக் கடிந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் செயலணி நிறுவப்படும் முடிவில் மாற்றமில்லை என்றும் கூறியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை -02- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட, சரத் பொன்சேகா விவகாரம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

"அரசியல் நோக்கில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்போது மக்களுக்கான அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்புக்களையும் உள்ளடக்கிய செயலணியை நிறுவ வேண்டும்.

இது கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்படும் முடிவு அல்ல. தேசிய அரசையும், மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்படுகின்ற முடிவாகும்.

சரத் பொன்சேகாவுக்கு கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. அவரை அத்தியாவசிய சேவையை முன்னெடுக்கும் செயலணிக்குப் பொறுப்பாக நியமிப்பது பற்றியே பேசப்பட்டது.

அமைச்சரவையில் பேசப்படும் விடயங்களை பொது வெளியில் பேசும்போது அமைச்சர்கள் பொறுப்பாகச் செயற்பட வேண்டும்" என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களைக் கடிந்துகொண்டார் என்று தெரியவருகின்றது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போது அமைச்சராகவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைத் தளபதியாக நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று அமைச்சர்கள் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகாவை சிறப்புச் செயலணியின் தலைவராக நியமித்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரவையில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் மாறிமாறி தகவல்கள் அமைச்சர்களால் வெளியிடப்பட்டமையினாலேயே ஜனாதிபதி இவ்வாறு கடிந்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.