Header Ads



மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுபவர்கள், புத்த மதத்தினரா..? ஜனாதிபதிக்கு சந்தேகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தும் திட்டத்தைக் கைவிடுமாறு இலங்கை எதிர்க்கட்சிகளை அந்நாட்டு அதிபர் சிறீசேனா கேட்டுக் கொண்டுள்ளார்.

திரிகோணமலை நகரில் உள்ள சேமிப்புக் கிடங்குகளை இந்தியாவுடன் கூட்டாக நிர்வகிக்க இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்துக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, புத்தரின் வாழ்வை நினைவுகூரும் 'ஐநா வேசாக் தினம்' தொடர்பான விழாவில் பங்கேற்க வரும் 12-ஆம் தேதி இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.யான விமல் வீரவன்ச கூறியதாவது:

மோடி தனது பயணத்தின்போது எண்ணெய் சேமிப்புக் கிடங்கு தொடர்பான ஒப்பந்தம் குறித்து பேசவுள்ளார். இது தொடர்பாக இந்தியாவும் இலங்கையும் தற்போது பேசி வருகின்றன. இலங்கையின் நலனுக்கு எதிரான இந்த ஒப்பந்தத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும். இலங்கையை இந்தியாவிடம் விற்க முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, கொழும்பில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்துள்ள அவர்கள் (எதிர்க்கட்சிகள்) புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தானா? என்ற சந்தேகம் எழுகிறது. இலங்கையில் புத்த மதம் அறிமுகமானதில் இருந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உறவுகள் நீடித்து வருகின்றன. அந்த உறவுகளை வலுப்படுத்துவது என்பது இந்தியாவிடம் இலங்கை அடிபணிந்ததாக அர்த்தமில்லை.

இலங்கைக்குத் தீமை விளைவிக்கும் எந்த ஒப்பந்தத்தையும் எந்த நாட்டுடனும் நான் செய்து கொள்ள மாட்டேன். நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கவோ, மற்ற நாடுகளுடன் விரும்பத்தகாத ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளவோ நான் ஆட்சிக்கு வரவில்லை. எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் கருப்புக் கொடி போராட்டத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார் சிறீசேனா.

No comments

Powered by Blogger.