Header Ads



தீர்வு காண திராணியற்ற, முஸ்லிம் தலைமைகள்

-விடிவெள்ளி பத்திரிகை  வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்-

இலங்கை முஸ்லிம் சமூகம் சம காலத்தில் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற போதிலும் அவற்றுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக தோல்விகளையே கண்டு வருகின்றன. 

புதிய சட்டத் திருத்தங்கள், வடக்கு கிழக்கில் சிங்களமயமாக்கல், முஸ்லிம்களின் பூர்வீக காணிகளைச் சுவீகரித்தல், இனவாத சக்திகளின் பிரசாரங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், வடக்கு கிழக்கில் முளைக்கும் தொல்பொருள் வலயங்கள், எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம் கிராமங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகள், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்..... என ஏராளமான பிரச்சினைகளை பட்டியலிட முடியும்.

எனினும் இந்த விவகாரங்களுக்கு உரிய மட்டங்களில் பேச்சுக்களை நடத்தி தீர்வினைப் பெற்றுத் தருவதற்கான அரசியல் திராணி தற்போதைய முஸ்லிம் தலைமைகளிடம் இல்லாதிருப்பது கவலைக்குரியதாகும். குறிப்பாக பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகிக்கின்ற போதிலும் முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்கள் தொடர்பில் இவர்கள் எந்தளவு தூரம் குரலெழுப்புகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

நேற்று முன்தினம் பாராளுமன்றில் உரை நிகழ்த்திய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, புனித ரமழான் மாதம் நெருங்கி வரும் வேளையில் பேரீச்சம்பழத்தின் மீதான வரியை அதிகரித்து அதன் விலையை உயர்த்தியுள்ளது ஏன் என்றும் இது விடயமாக முஸ்லிம் தலைமைகள் எதுவுமே பேசாது மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பியிருந்தமை இந்த இடத்தில் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

பேரீச்சம்பழ வரி அதிகரிப்பு பற்றி மட்டுமல்ல, மேற்சொன்ன முஸ்லிம் சமூகத்தின் இருப்பில் கை வைக்கின்ற, அடிப்படை உரிமைகளை மீறுகின்ற வியடங்கள் தொடர்பிலும் கூட முஸ்லிம் தலைமைகள் பாராளுமன்றில் பேசத் தயங்குகின்றனர். சமீப நாட்களில் ஓரிருவர் அது பற்றிப் பேசினாலும் அதனால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

முசலியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலம் ஜனாதிபதியினால் வர்த்தமானி பிரகடனம் மூலம் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அது பற்றி ஜனாதிபதியை நேரில் சந்தித்து தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க முடியாத நிலையிலேயே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் உள்ளனர்.

மாறாக தனித்தனி அணியினராக ஜனாதிபதியின் செயலாளரையே சந்தித்து வெவ்வேறு கோணங்களில் இந்தப் பிரச்சினைகளை கையாண்டனர். இவை முஸ்லிம் கட்சிகளிடையேயான அரசியல் போட்டியின் விளைவே அன்றி வேறில்லை எனலாம். அதுமாத்திரமன்றி முசலி விவகாரம் தொடர்பாக ஒரு கட்சியினர் நடாத்திய கூட்டத்தை மற்றொரு கட்சியினர் குழப்புகின்ற அளவுக்கு இன்று முஸ்லிம் அரசியல் சீரழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந் நிலை மாற்றப்பட்டு முஸ்லிம் எம்.பி.க்கள் சமூக நலன்களை முன்னிறுத்தி செயற்படாத வரை மாயக்கல்லியில் மட்டுமன்றி வடக்கு கிழக்கு முழுவதும் சிலைகள் வைக்கப்படுவதையும் விகாரைகள் கட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியாது போய்விடும் என்பதை சொல்லிவைக்க விரும்புகிறோம்.

4 comments:

  1. யாரை யார் குறைசொல்வது என்பதில் கூட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஈடுபாடு காட்டும் இந்நிலைமையால் ஏற்படும் வெற்றிடத்தை நன்றாக பேரினவாதிகள் பயன்படுத்தி வருவதை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது சூனியமான எதிர்காலத்தை நோக்கிய பயணமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
    எனவே நாம் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவேண்டியது அவசரமானதும் அவசியமானதுமாகும். தற்கால முஸ்லிம் அரசியல்வாதிகளை தனிமைப்படுத்த வேண்டும் புறக்கணிக்க வேண்டும் சிவில் சமூக அமைப்புக்கள் இதற்காக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்ட வேண்டும் நாம் ஒவ்வொருவரும் இதில் இணைந்துகொள்ள வேண்டும். இதனூடாக அரசியலில் இருந்து இவர்களை துடைத்தெறியலாம்.
    இப்படியெல்லாம் சின்னதாக ஆசைதான். ஆனால் மரத்துல கட்டின மாடுகள் போன்று.....
    எமது பாமர வாக்காளர்கள் இருக்கும் வரை யாவும் கற்பனையே!

    ReplyDelete
  2. 05.05.17ம் திகதி நேத்ரா அலைவரிசையில் இடம்பெற்ற வெளிச்சம் நிகழ்ச்சியில் அமீர் அலி ஈச்சம்பழம் சம்பந்தமாக நேயர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் முட்டள்தனமானது. பள்ளிவாசல்களில் வழங்கப்படும் 500 அல்லது 750 கிராம் ஈச்சம்பழம் ஒரு குடும்பத்தினருக்கு போதுமா? இது விசயமாக நிதி அமைச்சரிடம் பேசிய விஷயங்கள் என்ன? இது போன்ற சில்லறை பிரச்சினையை விட பெரிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறார்... இது வரைக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து வெற்றி பெற்ற பெரிய விஷயம் என்ன.? எங்களுக்கு நன்றாக தெரியும் உங்களைப்போன்ற அரசியல் தலைமைகளால் இந்த சமூகத்திற்கு எப்பொழுதும் எதுவும் செய்ய முடியாது...

    ReplyDelete
  3. mohamed lafir மேலே குறிப்பட்டது போன்று இந்த அரசியல்வாதிகளை கட்டாயமாக ஓரம் கட்ட வேண்டும்.இந்த ரோசம் கேட்ட,மானம் கேட்ட,போக்கணம் கெட்ட,இந்த கள்ளர்கள் இருக்கும் வரை இந்த சமுதாயத்தை இந்த சிங்கள இனவாத கடும் போக்கார்களும் இனவாத அரசாங்கமும் நமது இருப்புகள் அனைத்தையும் பறித்து எடுத்து விடுவார்கள் கடைசியில் அவர்களிடம் முஸ்லிம்கள் கூலிக்கு அடிமை வேலை சையும் நிலை ஏற்படும்.ஆகவே முஸ்லிம்களே,முஸ்லிம் உம்மத்துக்களே விழுத்து எழுங்கள் இந்த கசபோக்கிலி அரசியல் வாதிகள் முடிந்த அளவு களவும் கொள்ளையும் ஊழலும் செய்துள்ள காரணத்தால் வாய் திறந்து பேச முடியாமல் தேங்காய் பூ திண்ட கோழிபோல் விக்கி திரிகின்றார்கள்.இவர்களிடம் நாம் முச்ளிம்களுக்கான தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள் தனமாகும்.இந்த அரசியல்வாதிகளுக்கு பின்னால் வாய் பிடுத்து திரியும் வெட்கம் கெட்ட சிலர் ஊரூராக வருவார்கள் கௌரவ அமைச்சர் அப்படி பேசினார் இப்படி பேசினார் கழுத்து விடப்போகின்றார் என்றல்லாம்.இந்த வால் பிடிக்கும் நாய்கள் வரும் ஊர்களில் இவனுகளுக்கு செருப்பால் அடித்த அடியில் அங்கு அரசியல் வாதிக்கு காச்சல் பிடிக்க வேண்டும்.இன்னும் போருக்க முடியாது இந்த கேவலம் கெட்ட கள்ள ஊழல்வாதிகலான அரசியல்வாதிகளை.இனி அரசியல்வாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு ஊரிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.பொது தளங்களில் எழுத முடியாத அளவுக்கு மக்களுக்கு ஆத்திரமும் கோபமும் வருகின்றது.

    ReplyDelete
  4. JAFFNA MUSLIM குடும்பத்தினரே!
    நீங்கள் சற்று ஓயாது சமூகத்துக்காக ஓதவேண்டிய கட்டத்திலுள்ளீர்கள். இந்த எங்கட அரசியல் குள்ளநரிகள்,எருமைமாடுகளெல்லாம் ஒன்றுசேர்க்கும் பணியில் ஈடுபட்டு எப்படியோ ஒன்றுசேர்ப்பது உங்களது கட்டாய கடமையாக இருக்கிறது.இதுக்குரிய கூலி அல்லாஹ்விடம்.

    ReplyDelete

Powered by Blogger.