May 20, 2017

இளைஞர்களைத் தாக்கும் ''விழித்திரை''

இளைஞர்களைத் தாக்கும் ஒரு விழித்திரை பிரச்னை Central serous chorioretinopathy (CSC or CSCR). 20 முதல் 40 வயதுள்ளவர்களை பாதிப்பது இந்த சென்ட்ரல் சீரஸ் கோரியோரெட்டினோபதி. அதிகம் மன அழுத்தம் உள்ளவர்கள், இரவு போதுமான தூக்கம் இல்லாதவர்கள், அதிக வேலைபளு கொண்டவர்களுக்கு இந்தப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதேபோல இரவு நேர காவலர்கள், வாகன ஓட்டுநர்கள், தொடர்ந்து இரவுப்பணியில் இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம்.சரி... இந்த சென்ட்ரல் சீரஸ் கோரியோரெட்டினோபதியைக் கொஞ்சம் விரிவாக அலசுவோம். விழித்திரையின் மையப்பகுதியை மேகுலா(Macula) என்கிறோம். அதற்கு அடியில் தண்ணீர் சேர்வதால் இந்த CSCR பிரச்னை வருகிறது. 85 சதவிகிதம் பேருக்கு CSCR தானாகவே சரியாகிவிடும். ஆனால், இரவு நன்றாகத் தூங்க வேண்டும். மன அழுத்தம்குறைக்கப்பட வேண்டும்.

இதற்கு சில அறிகுறிகள் உண்டு. ஒரு கண்ணில் மட்டும் கருப்பாகத் தெரிய ஆரம்பிக்கும். மத்தியில் கருப்பாகத் தெரியும். தண்ணீர் வழியே பார்க்கிற மாதிரி தோன்றும். திடீரென்றுதான் இந்தப் பிரச்னை ஆரம்பிக்கும்.என்ன செய்ய வேண்டும்?பிரச்னையை உறுதி செய்த பிறகு கண் மருத்துவர் இதற்கான சத்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். வாழ்க்கை முறையில் மாற்றங்கள் தேவை. யோகா, தியானம் போன்றவைகூட பயன்தரும். மன அழுத்தத்தைக் குறைக்கிற விஷயங்களில் ஈடுபட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.சிலருக்கு இந்தப் பிரச்னை சரியாகாமல் இருக்கும். அவர்கள் ஆஸ்துமா, சரும பிரச்னைகள் போன்றவற்றுக்காக ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்களாக இருக்கலாம். ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் பிரச்னைக்காக ஸ்டீராய்டு மாத்திரை, ஆஸ்துமாவுக்காக ஸ்டீராய்டு ஸ்பிரே, தோல் பிரச்னைகளுக்காக ஸ்டீராய்டு ஆயின்மென்ட் எடுப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வரும்.

கண்ணில் பிரச்னை தொடர்கிறபோது, இவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளை நிறுத்தியாக வேண்டும். அப்படி நிறுத்த முடியாதவர்களுக்கும், இன்னொரு கண்ணும் சென்ட்ரல் சீரஸ் கோரியோரெட்டினோபதி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும், 3 மாதங்களுக்கும் மேலாக விழித்திரையில் தண்ணீர் சேர்ந்திருப்பவர்களுக்கும் லேசர் சிகிச்சையைப் பரிந்துரைப்போம். இதற்கான லேசரில் மயக்க மருந்து கிடையாது. ஆபரேஷன் என்றதும் பயப்பட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்டவரை உட்கார வைத்து பச்சை கலர் லைட்டைச் செலுத்தி 2 நொடிகளில் செய்யப்படுகிற மிக எளிமையான சிகிச்சை இது.

இதற்கு முன்பெல்லாம் ஃப்ளூரசன் ஆஞ்சியோகிராபி(Fluorescein Angiography) என்கிற சிகிச்சையே மேற்கொள்ளப்பட்டது. அதில் கை நரம்பில் ஊசிபோட்டு, ஒருவித டையைச் செலுத்தி எங்கிருந்து தண்ணீர் ஊற்றியிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அந்த இடத்தில் லேசர் செய்வார்கள். சிடி எனப்படுகிற கோல்டு லேசர் இன்று ரொம்பவே நவீனமானது. இவை மட்டுமின்றி மாத்திரைகளும் கொடுக்கப்படும். அது தண்ணீர் ஊற்றுகிற பகுதியை சரிசெய்யும்.

அரிதாக சிலருக்கு இந்தப் பிரச்னை சரியே ஆகாமல் முழுவதுமாக விழித்திரை விலகி, அறுவை சிகிச்சை வரை கொண்டு போய் விடுவதும் நடக்கும் அல்லது மேலே சொன்ன எந்த சிகிச்சையிலும் சரியாகாமல் கண்பார்வையானது குறைந்துகொண்டே போகலாம். சென்ட்ரல் சீரஸ் கோரியோரெட்டினோபதி பிரச்னைக்கும் காசநோய்க்கும் தொடர்புள்ளதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.இந்த விழித்திரை பிரச்னையை சரி செய்ய உணவு முறையும் பெரிதும் உதவும்.
இஞ்சி, பூண்டு, லீக், பீட்ரூட், கேரட், முட்டைக்கோஸ், செலரி, பசலை, ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, கோதுமைப் புல் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையை இயற்கையாக விரட்ட முடியும்!

0 கருத்துரைகள்:

Post a Comment