Header Ads



இந்த விவசாயியின் கதை, உங்கள் உள்ளத்தை உருக்கும்..!

 ஒவ்வொருவரும் விவசாயத்தை நோக்கி வருவதற்கு ஒவ்வொரு கதை இருக்கும். ஆனால், இந்த விவசாயியின் கதை உங்கள் உள்ளத்தை உருக்கும்! 

"பத்து, இருபது தடவ கீழே விழுந்தேன். கையில ஒரு தடியை வெச்சு கீழே ஊனி நடந்து பாத்தேன். கொஞ்சம் கொஞ்சமா நடந்தேன்."

ஒவ்வொருவரும் விவசாயத்தை நோக்கி வருவதற்கு ஒவ்வொரு கதை இருக்கும். ஆனால், இந்த விவசாயியின் கதை உங்கள் உள்ளத்தை உருக்கும் ஓர் உணர்ச்சி அனுபவமாக இருக்கும். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ளது கலுங்கடி கிராமம். இந்த கிராமத்திலுள்ள முருகன் என்பவர் தன்னுடைய இரு கால்களையும் இழந்தும் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய நம்பிக்கை கதையை அவரே சொல்கிறார்.

‘‘என் பேரு முருகன். அப்பா வேதமாணிக்கம், அம்மா செல்வமணி, தம்பி சின்னத்துரை மூளை வளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளி. இவங்களோட சொர்ணகிளின்னு ஒரு தங்கச்சி. நான் அஞ்சாப்பு வரைதான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வசதி இல்ல. அப்பாக் கூட சேர்ந்து எங்களுக்கு சொந்தமான தோட்டத்துலயே நெல், வாழை, வெள்ளரி, தக்காளியெல்லாம் போட்டு விவசாயம் செய்துட்டு இருந்தோம். வாழ்க்கையும் சுமாரா போய்க்கிட்டுருந்தது.

ஒரு கட்டத்துல குடும்ப செலவுக்கு வாங்குன கடனை கொடுக்க முடியாம, தோட்டம் அடமானத்துக்குப் போயிடுச்சு. கடனும் அதிகமா ஆயிட்டதால வெளியூருக்கு எங்கயாவது வேலைக்குப் போகலான்னு யோசிச்சேன். தெரிஞ்ச நண்பர் மூலமா 2005ல் மும்பைக்கு போனேன்.

தாராவி பகுதியில் தங்கிகிட்டு கிடைச்ச வேலைகளையெல்லாம் செஞ்சிட்டு இருந்தேன். அப்பதான் கலர் மீன்களை கண்ணாடி தொட்டியில் போட்டு வீடு, அலுவலகங்களில் வளர்ப்பதில் மும்பை மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்ததைப் பாத்தேன். கண்ணாடித் தொட்டிகளில் வளக்குற மீன்களுக்கு இரையாக ஒருவித புழுவைப் போடுவார்கள். இந்தப் புழுக்களைப் பிடிச்சு விக்குறதுல போட்டி அதிகமா இருக்கும்.

இதுக்காக மும்பையில் இருந்து சுமார் 160 கி.மீ தூரத்தில் இருக்கும் புனேவுக்கு செல்வோம். அங்குள்ள ஆறுகளில் இந்த புழுக்கள் அதிகமாகக் கிடைக்கும். இரவு 1 மணிக்கு மும்பையில் இருந்து ரயில் ஏறுனா விடிய காலை 6 மணிக்கு புனே போயிருவோம். விடியற்காலையிலயும், வெயில் இல்லாத நேரத்துல மட்டும்தான் இந்த புழுக்களைப் அதிகமா பிடிக்க முடியும். ஒரு நாளைக்கு சராசரியா 4 கிலோ புழுக்கள பிடிப்பேன். சராசரியா 700 ரூபாவை ஒருநாள்ல சம்பாதிச்சிடுவேன். கிடைச்ச பணத்த குருவி சேக்குற மாதிரி கொஞ்ச கொஞ்சமா சேத்து 2006ல எங்க குலசாமியான தோட்டத்தை அடமானத்துல இருந்து மீட்டேன்.

'தோட்டத்தைத்தான் மீட்டுட்ட, கல்யாணம் முடிச்சிடலா'ன்னு வீட்டுல சொன்னாங்க. ரெண்டு வருஷம் போட்டும், இன்னும் சம்பாதிச்சு கூடுதலா தோட்டம் தொரவு வாங்கிடுறேன்னு சொல்லிட்டு மும்பைக்குப் கிளம்பிட்டேன். வழக்கம் போல புழுக்களப் பிடிச்சுட்டு வந்து, வித்திட்டு இருந்தேன்.

ஒருநாள் நல்ல காய்ச்சல், கை, கால் உடம்பு வலி ரயில்ல அசந்து தூங்கிட்டேன். அதிகாலை 3 மணி இருக்கும். புனே ரயில் நிலைய பிளாட்பாரத்துல ரயில் நின்னது. கூட வந்தவங்க எல்லாரும், இறங்கிட்டாங்க. அசந்து தூங்கிக்கிட்டுருந்த என்னை எழுப்ப கொஞ்சம் தாமதமாயிடுச்சு. ரயிலும் நகரத் தொடங்கிடுச்சு. கண் முழிச்சி அவசர, அவசரமா ரயில் பெட்டியோட கதவுப்பக்கம் வந்து பிளாட்பாரத்துல எகிறி குதிச்சேன். பிளாட்பாரத்தை விரிவுபடுத்த ஜல்லி கற்கள் போட்டிருந்தது எனக்குத் தெரியல. அவசரத்துல ஜல்லி மேல குதிச்சதும் கால் சறுக்கி பிளாட்பாரத்துக்கும், ரெயிலுக்கும் இடையிலே விழுந்துட்டேன். கண்ணை மூடி முழிக்கிறதுக்குள்ள ரெண்டு கால்களும் கரும்புச்சக்கை மாதிரி நசுங்கி போயிடுச்சி.

விபத்தில் சிதைஞ்சு போன கால்களை அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லைனு டாக்டர் சொன்னதும், இனிமேல் விவசாயக் கனவு என்னவாகும்னுதான் யோசிச்சேன். சம்பாதிச்ச பணமும் ஆபரேஷனுக்கு சரியாப்போச்சு. எனக்கு மருந்து, மாத்திரை கொடுத்து கவனிக்கக்கூட யாரும் இல்லை. தூத்துக்குடியைச் சேர்ந்த மும்பையில் வசிக்கும் ராஜூ என்ற தமிழர், நான் இருந்த ஆஸ்பத்திரிக்கு இன்னொரு நோயாளியைப் பாக்க வந்தார். நான் தமிழ் பேசுறதைப் பாத்துட்டு, விபத்து நடந்ததைப் பத்தி கேட்டார். அவர் உதவியால 4 மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். ஆஸ்பத்திரிக்கான எழுபதாயிரத்தோடு தினமும் சாப்பாடு கொடுத்து கவனிச்சுக்கிட்டாரு..

அவர் பெரிய கோடீஸ்வரர் இல்ல.. சாதாரண சாப்பாட்டுக்கடை நடத்தி வருபவர்தான். 4 மாசம் சிகிச்சை முடிஞ்சதும் 2 செயற்கை கால்களும் வாங்கி கொடுத்தார். கால்ல இருந்த காயங்களும் நல்லா ஆறிடுச்சு. டாக்டர்கள் வீட்டுக்குப் போகலாம்ன்னு சொன்னாங்க. இனியும் ராஜூவுக்கு செலவு வைக்கக்கூடாதுன்னு கலுங்கடி கிராமத்துக்கே வந்துட்டேன்.

கிராமத்துக்கு வந்ததும் எல்லாரும் என்னை பரிதாபமா பாத்தாங்க. என்னால் எந்த வேலையும் செய்ய முடியாதுன்னு நினைச்சாங்க. அவங்க பாவப்படுவதும், எனக்கு உதவுவதும் பிடிக்கல.. செயற்கைக் கால்களை மாட்டிக்கினு வீட்டுக்குள்ளேளே சுவரைப் பிடிச்சு நடந்து பாத்தேன். பத்து, இருபது தடவ கீழே விழுந்தேன். கையில ஒரு தடியை வெச்சு கீழே ஊனி நடந்து பாத்தேன். கொஞ்சம் கொஞ்சமா நடந்தேன். ராப்பகலா தூங்காம புழு பிடிச்சு அடமானத்துல இருந்து மீட்ட தோட்டத்தைப் போய் பாத்தேன். அப்புறம் விவசாய வேலைகள கொஞ்ச கொஞ்சமா செய்ய ஆரம்பிச்சுட்டேன். முன் இருந்த வேகம் வரல..

நேரம் அதிகமானாலும் மெதுவா வேலைகள செஞ்சிட்டு வர்றேன். வீட்டை விட்டாத் தோட்டம், தோட்டத்தை விட்டா வீடுன்னு இந்த எட்டு வருஷத்துல எங்கேயும் போகல..

விவசாய வேலைகள் மட்டுமே என் காயத்துக்கு மருந்தா இருந்துட்டு வந்துச்சு. இப்போ பழையபடி நெல், தக்காளி, வெண்டை, வெள்ளரி, புடலைன்னு பயிர் செஞ்சிட்டு இருக்கேன். காய்கறிகளை சந்தைக்கு எடுத்து போறதுக்கு மட்டும் மத்தவங்களோட உதவி தேவைப்படுது. மத்த வேலைகள முடிஞ்சளவு நானே பாத்துக்குறேன். யாருகிட்டயும், எந்த உதவியையும் கால் இருக்கும் போதும் சரி, இப்போ இல்லாம இருக்கும்போதும் சரி எதிர்பாக்குறது இல்ல" என்று கட்டை விரலை உயர்த்தி சொல்லும் முருகனின் கண்களில் ஒளிர்ந்த தன்னம்பிக்கையை பார்க்க முடிந்தது.

இ.கார்த்திகேயன் படங்கள்: எல்.ராஜேந்திரன்

No comments

Powered by Blogger.