Header Ads



தகாத வார்த்தைகளால், தள்ளாடிய பாராளுமன்றம் - மகிந்த அணி + மங்கள மோதல்

பிரபாகரனுக்கு ஒரு விளக்கு, மகிந்தவிற்கு ஒரு விளக்கு என்று பொய்யான வதந்திகளைப் பரப்பிக் கொண்டு வர வேண்டாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

மகிந்தவின் பாதுகாப்பு குறைந்து விட்டது, அவரைக் கொலை செய்யப் போகின்றார்கள், பிரபாகரனுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படப்போகின்றது என வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.

அவ்வாறான ஓர் நிலை இப்போது இல்லை. கடந்த காலங்களில் கொலைகளை செய்தவர்களே மகிந்த தரப்பினர்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அப்போதைய மகிந்த தரப்பே செய்தது. ஜீ.எல். பீரிஸ் இதற்கு அனுமதி அளித்திருந்தார்.

இவை அனைத்தும் தற்போது விசாரிக்கப்படுகின்றது கூடிய விரைவில் கொலையாளிகள் வெளிச்சத்திற்கு வருவார்கள். ஆதாரங்கள் அனைத்தும் அம்பலப்படுத்தப்படும்.

அதேபோல் 2012ஆம் ஆண்டு விமல் வீரவங்ச கொலம்பியாவிற்கு சுற்றுப் பயணம் செய்தார். அவர் அரசு செலவில் தனது 11 வயது மகனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

இது பற்றிய அனைத்து ஆதாரங்களும் உள்ளன. அரச சொத்துக்களை திருடியவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

உங்களிடம் ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்றால் எம்மிடம் நூறு குற்றச்சாட்டுகள் உள்ளன அனைத்தையும் அம்பலப்படுத்துவோம் எனவும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து விமல் வீரவங்ச கருத்து தெரிவிக்கையில்,

கொலம்பியாவிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றது உண்மையே. ஆனால் அது அரசின் பணத்தில் அல்ல சொந்தப் பணத்திலேயே ஆகும். பொய்யாக சேறு பூச வேண்டாம் என தகாத வார்த்தைகள் கலந்து ஆக்ரோசமாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, உங்களைப் போல திருடன் நான் இல்லை. திருடர்களாகவும் கொலைகாரர்களாகவும் இருப்பதை விடவும் நானாகவே இருந்து விட்டுப் போகின்றேன்.

அனைத்து ஆதாரங்களும் உள்ளன அனைத்தையும் அம்பலப்படுத்துவோம் என மங்கள சமரவீர தெரிவித்தார்.

இவருடைய கருத்தைத் தொடர்ந்து மகிந்த அணியினர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து கூச்சலிட்டனர், தொடர்ந்து மங்கள சமரவீரவும் தகாத வார்த்தைகளை பிரயோகித்தார்.

இதனால் உறுப்பினர்கள் ஆசனங்களை விட்டு எழுந்து கூச்சல் இட்ட காரணத்தினால் சபை அமைதியிழந்து சர்ச்சைக் களமாக மாறிப்போனமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.