Header Ads



வேடிக்கை பார்க்கச் செல்லாதீர்கள் என வேண்டுகோள்

தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலையை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்கள் காரணமாக அனர்த்த நிலைமை தீவிரமடையும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் இரத்தினபுரியில் நடைபெற்ற மண்சரிவை வேடிக்கை பார்க்க வந்த இரண்டு பேர் சடுதியாக ஏற்பட்ட இன்னொரு மண் சரிவில் சிக்கி உயிரை இழந்திருந்தனர்.

ஹம்பாந்தோட்டையிலும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க முற்பட்ட இளைஞர் ஒருவர் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தார்.

தற்போது காலி களுகங்ககையின் கிளை வாய்க்கால் ஊடறுத்துப் பாயும் வக்வெல்லைப் பிரதேசத்தில் வெள்ள நீரை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று சேரத்தொடங்கியுள்ளனர்.

வக்வெல்ல கால்வாயின் பக்கவாட்டு அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் அபாய அறிவித்தல் விடுத்திருந்தனர்.

எனினும் வேடிக்கை பார்க்கும் நோக்கில் அங்கு திரண்டு வரும் பொதுமக்கள் அணையின் மீது வாகனங்களை நிறுத்தி விட்டு ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்பதுடன், அவ்வாறு வரும் பொதுமக்களை இலக்கு வைத்து நடமாடும் வியாபாரிகளின் சிற்சிறு வர்த்தக நிலையங்களும் சடுதியில் முளைக்கத் தொடங்கியுள்ளன.

இதன் காரணமாக வக்வெல்லை பிரதேசத்தில் பாரிய அனர்த்தம் ஒன்றுக்கான அபாய நிலை தோன்றியுள்ளது.

எனவே வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் தொடர்பில் வேடிக்கை பார்ப்பதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.