Header Ads



சிங்கள இளைஞர்கள் அனைவரும், ஆவேசமாக இருக்கின்றனர் - பொதுபல சேனா

சிங்கள இளைஞர்கள் அனைவரும் ஆவேசமாக இருக்கின்றனர். இனிமேல் என்ன நடக்கும் என்பது தெரியாது என பொதுபல சேனாவின் ஜபுரேவல சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால்  இடம் பெற்ற ஊர்வலத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் பௌத்தம் அழிந்து கொண்டு வருவதாக ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனினும் அதற்காக கருத்து தெரிவிக்கும் எம்மை இனவாதிகளாக சித்தரித்து விட்டார்கள்.

மேலும், வடக்கில் விக்னேஸ்வரன் தனி ஈழத்தினை இலங்கை வரைபடத்தில் அமைத்துக் கொண்டு வெற்றியை கொண்டாடுகின்றார், விஜயகலா பிரிவினைவாதக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றார்.

சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளை நினைவு கூர்ந்து கொண்டு வருகின்றார், அசாத்சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் உட்பட பலரும் இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கு எதிராக நாட்டின் நீதி செயற்படவில்லை. ஆனால் ஞானசார தேரர் பௌத்தத்திற்காக கருத்து வெளியிடும் போது அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

நாம் நாட்டில் இனவாதம் பரப்பும் அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளோம். அவர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும். அவ்வாறு கைது செய்தால் ஞானசாரர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். அதனைச் செய்யாது இதே வகையில் பிரச்சினை தொடருமானால் அதனால் விளைவுகள் பாதகமாக அமையும்.

சிங்கள இளைஞர்கள் மிகுந்த ஆவேசத்தில் உள்ளார்கள் அதன் காரணமாக அடுத்தது எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்ன நடக்கும் என்பது எமக்கு தெரியாது என பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் சந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.