Header Ads



தலாக்கிற்கு பதிலாக, முஸ்லிம்கள் விவாகரத்துக்கு மாற்று வழி என்ன..?

-BBC-

முஸ்லிம் பெண்களை மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை குறித்து இன்று -11-05-2017 உச்சநீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.

மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இது ஒரு முக்கியமான வழக்காக இருப்பதால் இதை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் இதனை பாரபட்சமின்றி அணுக வேண்டும் என்பதற்காக, தலைமை நீதிபதி உள்பட பல்வேறு மதங்களை சார்ந்த ஐந்து நீதிபதிகள் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் இந்த வழக்கு குறித்து என்ன அம்சத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

மும்முறை தலாக் சொல்வது, ஒரு முஸ்லிம் ஆண் பல பெண்களை திருமணம் செய்வது ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பலதார திருமணம் குறித்து ஆராயப்போவதில்லை என்றும் தலாக் குறித்து மட்டுமே விசாரிக்க போவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தலாக் முறைக்கு எதிராக பிப்ரவரி மாதம் சாயிரா பானு என்பவர் தான் முதன் முதலில் மனு தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் தலாக்கிற்கு எதிராக மனுதாக்கல் செய்திருந்தனர் அனைத்து மனுக்களுமே இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இந்த தலாக் முறை கைவிடப்பட்டுள்ளது எனவே இது மதம் சார்ந்தது இல்லை என்று வாதிடப்பட்டது.

அதற்கு தலாக் முறை வேண்டாம் என்று சொல்லும் பட்சத்தில் விவாகரத்து செய்வதற்கான மாற்று வழி என்ன என நீதிபதிகள் தரப்பில் கேட்கப்பட்டது.

மனுதாரர்களில் ஒருவரான அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், ஒரே முறையில் மூன்று முறை தலாக் சொல்லக் கூடாது என்றும் ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் தலாக் தலாக் என்று மூன்று முறை கூறினால் அது தவறில்லை; அக்காலத்திற்குள் குடும்பத்திற்குள் சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ஜீவனாம்சம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு அந்த தலாக் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்தனர்.

முஸ்லிம் மக்களில் உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் இது பொருந்துமா என்று நீதிபதி தரப்பில் கேட்ட போது ஷியா, சுன்னி போன்ற அனைத்து பிரிவினர்களுக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டது.

ஆனால் தலாக் முறை தங்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளது என முஸ்லிம் பெண்கள் அமைப்பின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பெண்கள் விவாகரத்து செய்ய வேண்டும் என்றால் ஷரியத் நீதிமன்றத்தை அணுக வேண்டும். ஆனால் ஆண்கள் தலாக் முறையில் விவாகரத்து செய்ய முடியும் எனவே இது பாரபட்சமாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இஸ்லாமிற்கும் தலாக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் மதத்தின் பெயரால் இதை விதிக்க கூடாது என்றும் பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினசரி நடைபெறும் இந்த விசாரணை ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.