Header Ads



சம்பந்தனுக்கும், நிமல் சிறிபாலவுக்கும் சூடான வாக்குவாதம்

அரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அரசியலமைப்பு வரைவில் unitary என்ற ஆங்கிலச் சொல்லுடன், அகீயா என்ற சிங்களப் பதமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார்.

அதற்கு நிமல் சிறிபால டி சில்வா, அது யதார்த்தமானது அல்ல என்று பதிலளித்த போது இரா.சம்பந்தன் கோபமடைந்தார்.

சொற்களுக்காக சண்டையிட்டுக் கொள்ளாமல் அரசியலமைப்பு திருத்தத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதே முக்கியமானது என்று நிமால் சிறிபால டி  சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, சம்பந்தன், அரசியலமைப்பு மாற்ற செயல்முறைகளை அனைத்துலக சமூகம் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

இதற்கு, நிமல் சிறிபால டி சில்வா, அனைத்துலக சமூகத்தின் விருப்பத்துக்கேற்றவாறு செயற்படுவதற்கு தாம் ஆணை பெற்றிருக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

இதனால் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.