May 26, 2017

"முஸ்லிம் என்பதற்காகவே எங்கள், புன்னகை மீது நீங்கள் முறைக்கிறீர்கள்.."

-பர்சானா றியாஸ்-

நீங்கள் சலித்துக்கொள்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் சலாம் சொல்வதை நிறுத்த முடியாது

நீங்கள் முகம் சுழிக்கிறீர்கள் என்பதற்காக நாங்கள் சிரசு திறக்க முடியாது

நீங்கள் வைத்த வெடிகுண்டுகளில் எம் வணக்கஸ்தலங்கள் சிதறியிருக்கலாம் 

இன்னும் இருளில் நீங்கள்  மூட்டிவிட்ட தீப்பொறிகளுக்குச் சாட்சியமே இல்லாதிருக்கலாம், 

பற்றி எரிந்தது பார்த்து நீங்கள் உதிர்த்த குரூரப் புன்னகைகளால் உங்கள் சேமிப்புகள் கோடிகளால் உயர்ந்திருக்கலாம்

அவைதாம் உங்கள் கைகள்கொண்டு நீங்கள் சம்பாதித்தவை

முஸ்லிம் என்பதற்காகவே எங்கள் புன்னகை மீது நீங்கள் முறைத்துப் போகிறீர்கள்

இன்னும் பலவாறு முறைத்துப் போங்கள் 
மாறாத அதே புன்னகையுடன் நாங்கள் மேலும் பட்டைதீட்டப்படலாம்

"எந்தச் சமயத்தையும் பகைக்காது இருப்பதுதான் சகிப்புத் தன்மை" என்ற புத்தரின் "தம்மபதத்தில்" விளைந்தவர்கள்தான்  இந்த பௌத்தர்கள்

அவர்களுக்கு நீங்கள் என்னவகை உறவோ? 

எதுவாயினும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால், 

நீங்கள் ஆழம் அறியாது காலை விடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை

அண்ணலாரின் உயிர் பறிக்க எண்ணி வாளுடன் விரைந்த உமர்(றழி) இறுதியில் இஸ்லாத்தின் தூணாகத் திகழ்ந்த வரலாற்றைப் படித்திருக்கிறீர்களா?

அப்றஹா மன்னனின் படையிலிருந்து கஃபாவை காப்பாற்றுவதற்காய் அனுப்பப்பட்ட அபாபீல் பறவைகள் பற்றியாவது கேள்விப்பட்டதுண்டா?

துன்பம் நேரும்போதெல்லாம் எங்கள் நா மொழியும் 
"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்" என்ற வசனம் பற்றி நீங்கள் ஆச்சரியப்பட்டதுண்டா?

உங்கள் வாய்ச்சவடால்கள் கொண்டு, அவனொளியை அணைத்துவிட நீங்கள் முயற்சித்த போதிலும் தன் ஒளியை பூர்த்தியாக்காது இருக்கமாட்டான் என்ற இறை வாக்கையாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

ஆறாம் அதான்கூறி இமாம்களின் நிழலில் கூடிக் கையேந்திவிட்டால், அதன் மறுதாக்கம் என்னவென்பதை அறியாதவர்கள் நீங்கள் 

இஸ்லாமிய பெற்றோரின் வயிற்றில் நாங்கள் ஜனித்ததற்கான நன்றி அம்புகளை நீங்கள் வளைத்த  வில்லிலிருந்துதான் செலுத்துகிறோம் 

முற்றுப்பெற்றுவிட்ட இஸ்லாத்தை உங்கள் ரசனைக்காக   நவீனப்படுத்தும் தேவைப்பாடு எமக்கில்லை

எங்கள் நடைமுறைகளில்  குறைகண்டால் சகோதரத்துவமாய் எத்திவையுங்கள் 

"இஜ்திஹாத்" இல் எம்மை வழிநடாத்த இமாம்களை முன்மொழிகிறோம்

அந்த ஏகனால் இறக்கப்பட்ட மார்க்கத்தை அவனே காத்திடுவான்  எனும் மறைவசனம், எங்களது பொறுமைக்கு காரணமாகலாம்

உடமைக்கான சண்டையில்  மரணித்தாலும்கூட, உறுதியளிக்கப்பட்டிருக்கும் சுவனம் எங்களது போராட்டத்திற்கு காரணமாகலாம்

எது எவ்வாறாயினும், பொறுமை, போராட்டம் இரண்டிலும் எங்களுக்கு வெற்றியே, உங்களுக்கு?

(அறபுப்பத விளக்கம் 
"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்" - 
"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்”)

6 கருத்துரைகள்:

Masha allah very attractive

This comment has been removed by the author.

மாஷா அல்லாஹ், சொல்வத்தக்கு வார்த்தைகளில்லை, தொடரட்டும் உங்கள் பணிகள்.

Post a Comment