Header Ads



'முஸ்லிம்களின் அச்சத்தை, தமிழ்த் தலைமைகள் தீர்க்க வேண்டும்'

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் முஸ்லிம் மக்களின் அச்சத்தை தமிழ்த் தலைமைகள் தீர்த்து வைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பில் தமிழ்த் தலைமைகள் தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தனது அறிக்கையில் தெரிவித்ததாவது,

இன்று வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பில் தமிழ் தரப்பினர் அதிகம் பேசி வருகின்றனர். இவ் மாகாணங்களின் இணைப்பிற்கு முஸ்லிம்கள் தமது ஆதரவை வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுகின்றனர். அண்மைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதினம் அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்றில் நடைபெற்றபோது வடக்கு கிழக்கு இணைப்பே சிறுபான்மை சமூகத்திற்கு பாதுகாப்பாகும் என்று கருத்துப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்து இருந்தார். வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதால் தமக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கு கடந்த கால கசப்பான அனுபவங்களே காரணமாகும். தமிழர்கள் பெரும்பான்மையாக ஆட்சி அல்லது நிர்வாகம் செய்த பிரதேசங்களில் வாழ்ந்த சிறுபான்மை முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்ட வரலாறு அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் இன்றும் அவர்கள் பேசி வருகின்றனர். 

வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை இயங்கிய நிர்வாக காலப்பகுதியில் அபிவிருத்தி,வேலைவாய்ப்பு,காணி உரிமை தொடர்பில் வடகிழக்கு முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்டனர். வடகிழக்கில் தற்போது செயற்படும் பெருவாரியான முஸ்லிம் பிரதேச செயலகங்கள்,பிரதேச சபைகள் மற்றும் கல்வி வலயங்கள் யாவும் தமிழ் பிரதேச சபைகளில் இருந்து அல்லது கச்சேரி நிர்வாகங்களில் இருந்து பிரிந்தவையே. காரணம்தாம் பிரிந்து செயற்படுவதே புறக்கணிப்பில் இருந்து தம்மை விடுவித்து தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய மக்களை கல்வியில் முன்னேற்ற தமது மக்களுக்கான அரச நியமனங்களைப் பெற்றுக்கொள்ள ஒரே வழி என முஸ்லிம் சமூகம் தீர்மானத்திற்கு வர பாதை வெட்டியவர்கள் தமிழ் அரசியல் தலைமைகளும் அதிகாரிகளுமேயாகும். 

கடந்த யுத்த காலங்களில் முஸ்லிம்களுக்கு உயிர் அச்சுறுத்தல் நிலவிய சூழ்நிலைகளில் முஸ்லிம்களின் காணிகள் ஆயுதமுனையில் பறிக்கப்பட்டன. ஆயுதமுனையில் பறிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமை மாற்றம் வழங்கி முஸ்லிம்களின் காணி உரிமையை இல்லாதொழிக்கும் கைங்காரியத்தை அரச அதிகாரிகள் செய்தனர். அரச அதிகாரிகளில் வடகிழக்கில் பெருவாரியாக தமிழர்களே காணப்பட்டனர். இன்றும் அரச காணிகளை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியாத மனநிலையே அவ் அரச அதிகாரிகளிடம் காணப்படுகின்றது.

மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுகின்றபோது கிழக்கில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும் போது சம இனப்பரம்பல் அல்லது சற்று கூடிய நிலையில் காணப்படும் முஸ்லிம்கள் திடீரென சிறுபான்மையாக மாறும் நிலையே முஸ்லிம்களை பீதி அடையச் செய்துள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் பெரும்பான்மை ஆட்சி அல்லது நிர்வாகம் நிலவிய பிரதேசங்களில் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழ்ந்த போது மேற்சொன்ன புறக்கணிப்புகள் இடம்பெற்றன. வடக்கு கிழக்கு இணைக்கப்படுகின்ற போது தமிழர்களின் பெரும்பான்மை என்ற பலம் அதிகரிப்பதுடன் முஸ்லிம்கள் சிறுபான்மையாகி பலவீனமடையும் சூழ்நிலையே காணப்படுகின்றது. மேற்படி முஸ்லிம் மக்களின் நியாயமான அச்சத்தை தீர்த்து வைக்க வேண்டிய கடப்பாடு தமிழ் தலைமைகளுக்கு உண்டு என முபீன் மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக முஸ்லிங்களுக்கு இருக்கும் நியாயமான அச்சத்தை தீர்த்துவைக்குமாறு தமிழர்களிடம் கோருவது மடமையும் ஏமாளித்தனமுமிக்க ஒரு செயலாகும்.அவர்களே அவர்களுக்குரிய ஓரு தீர்வைக்கோரி நீண்ட காலமாக பாத்திரம் ஏந்திய நிலையில் நீடித்திருக்கும்போது எவ்வாறு மற்ற சமூகத்தின் அச்சத்தைப் போக்குவது?

    ReplyDelete
  2. கோமாளிகளையும் அறிவிலிகளையும் பாலிமன்றுக்கு அனுப்பியவர்கள்ளுக்கு நாள்ல வாய்க்கு வருது

    ReplyDelete
  3. Foolish sectary of SLMC Mr.Mufeen we are not ready to listen your foolish word

    ReplyDelete
  4. Who gave such a big and important post in SLMC for this foolish guy.

    ReplyDelete
  5. இப்படி எத்தனை பேர் இருக்கின்றீர்கள் உங்கள் கட்சியில்,மூளை வேறிடத்துக்கு மாற்றப்பட்டவர்களின் பேச்சு

    ReplyDelete
  6. தமிழ் தீவிரவாதத்திடம் முஸ்லிம்கள் பற்றி நல்ல எண்ணம் என்றுமே பிறக்காது. நாம் எம் கிழக்கு மண்ணை தாரைவார்க்க வேண்டிய எந்த தேவையும் எமக்கில்லை. வடகிழக்கு இணைப்புபற்றி சிந்திப்பதை SLMC இத்தோடு நிறுத்திவிடுவது தான் உங்கள் எதிர்கால அரசியலுக்கு சிறந்தது

    ReplyDelete

Powered by Blogger.