Header Ads



உஸ்தாத் மன்ஸூர் அவர்களுக்கு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்

இன்று இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு பட்ட விடயங்களில் கவணம் செலுத்த வேண்டியுள்ள தேவையில் இருக்கின்றனர் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள உண்மையாகும். அதில் அதிமுக்கியத்துவம் பெறும் ஓர் அம்சமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படல் என்பதும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் தாங்களால் அது சம்பந்தமாக ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
அதனை முழுமையாகப் படிக்கும் சந்த்தர்ப்பம் எனக்குக் கிடைக்காவிட்டாலும் அமதில் முக்கியமான இரண்டு அம்சங்களை படிக்கக்கிடைத்தது. ஒன்று பெண்களின் மணவயது, மற்றையது பெண் நீதிபதி என்ற அம்சங்களாகும். இவ்விரு விடயத்தலும் இரண்டாவது குறிப்பிட்ட விடயமான பெண் காழி என்பது பற்றித் தாங்கள் கொடுத்துள்ள சில விளக்கங்கள் நீங்களும் மீளப்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று கருதுகின்றேன்.
நீங்கள் முன்வைத்துள்ள 'சமூக வாழ்வில் பெண்கள் பங்களிப்பு குறைவாக இருந்த காலப்பகுதியில் பெண்கள் தலைமைப் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற கருத்து செல்வாக்குப் பெற்றதாக இருப்பது இயல்பானதுவேயாகும். சமூக வாழ்வில் பெண்களது பங்களிப்பு அதிகரித்து பெண்ணிலைவாதம் வலுத்துள்ள இக்காலப்பிரிவில் அப்பாரம்பரியக் கருத்தை மீளப்பரிசீலனை செய்வது அவசியமாகும்' என்ற தாங்களது நியாயம் பற்றி எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் என்னவென்றால்,
நபித்துவத்துக் காலப் பெண்கள் - சஹாபிய்யாக்கள் -, தாபிஈன்களது காலத்துப் பெண்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமுதாயத்துக்கும் செய்த பங்களிப்பை விடவும் இக்காலத்துப் பெண்கள் அதிகமாகவே பங்களிப்புச் செய்து வருகின்றார்களா? என்பதாகும். அக்காலத்துப் பெண்கள் ஜிஹாதுக் களங்களில் பங்கேற்று காயப்பட்டவர்களுக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவம் செய்தார்களே இது சமூக வாழ்வில் அவர்களது பங்களிப்பாக பார்க்க முடியாதா? அன்னை ஆஇஷh றழியல்லாஹு அன்ஹா ஜமல் யுத்தத்தில் கலந்து கொண்டார்களே இது சமூகப் பங்களிப்பாக பார்க்க முடியாதா? ஹபஸா முதல் எல்லா விதமான ஹிஜ்ரா பயணங்களிலும் பெண்கள் கலந்து கொண்டது சமூகப் பங்களிப்பு இல்லையா? அஸ்மா றழியல்லாஹு அன்ஹா தமது கணவனுடன் விவசாயத்திலும் , ஸைனப் றழியல்லாஹு அன்ஹா கைத்தொழிலிலும் ஈடுபட்டார்களே இது சமூகப் பங்களிப்பாக ஏற்க முடியாதா? ஆஇஷh, உம்மு ஸலமா றழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் மார்கத்தீர்ப்பு (ஃபத்வா) வழங்கக் கூடியவர்களாகவும் பெண்களுக்கான பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியைகளாகவும், 2210 ஹதீஸ்களை மனனமிட்டு அறிவித்துள்ளார்களே இது சமூகப் பங்களிப்பு இல்லையா? இவற்றையெல்லாம் விட அதிகமான பங்களிப்பையா எமது பெண்கள் இன்று செய்து வருகின்றனர்? இர் போன்று இன்னும் எத்துனையோ அக்காலத்துப் பெண்களின் சமூகத்துப் பங்களிப்புக்களைச் செய்துள்ள வேளையில் அவற்றை மறைப்பதாகவும் மேற்கத்திய சிந்தனையில் கவரப்பட்ட பெண்ணியம் பேசும் பெண்களது சேவைகளை மெச்சுவதாகவும் நான் பார்க்கின்றேன்.
அடுத்ததாக 'தலைமைப்பதவிகள் பெண்களுக்குரியதல்ல என்ற வாதத்துக்கு தெளிவான பலமான ஆதாரங்கள் இல்லா விட்டால் பெண்களும் ஆண்கள் போன்றே அப்பதவியை வகிக்கலாம் என்பது தெளிவு' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
அத்துடன் ஸூரா நிஸாவின் 34 வசனத்தையும் 'தமது காரியங்களுக்கு பெண்களை பொறுப்பாக நியமிக்கும் சமூகத்தினர் வெற்றி பெற மாட்டார்கள்' என்ற புகாரியில் பதிவிடப்பட்டுள்ள ஹதீஸையும் குறிப்பிட்டு , முதலாவது தரப்பட்டுள்ள திருமறை வசனம் குடும்ப வாழ்வோடு சம்பந்தப்பட்டதாகும். குடும்பத் தலைமை பற்றிப் பேசும் இவ்வசனத்தைப் பொதுமைப் படுத்துதல் பொருத்தமானதல்ல' என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆண்களே ஒரு சிறிய நிர்வாகமான வீட்டின் நிர்வாகத்தை கூட சுமக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கும் போது, எப்படி ஒரு பெரிய நிர்வாகமான சமூகத்தின் நிர்வாகத்தைப் பெண்களிடம் ஒப்படைக்க முடியும்? அது முடியாத ஒரு காரியமகும். இஸ்லாம் அவ்வாறு பெண்களை காழிகளாகவும், அமைச்சர்களாகவும் நியமிக்குமாயின் அது அவர்களது இயற்கைச் சுபாவத்துக்குச் செய்யும் அநீதியாகவும் சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகவுமே அமைந்து விடும். என்று குறிப்பிட்டுள்ளார்கள்.                   (பார்க்க : மின் ஹுனா நஃலமு, 160-161).
குடும்பத்துப் பொறுப்பையே ஆண்கள் சுமக்க வேண்டும் என்று பனித்துள்ள மார்க்கம் பாரிய சமூகப் பொறுப்புக்களை பெண்களிடம் ஒப்படைப்பதானது பொருத்தமானதாக அமைய முடியுமா? 
அடுத்து மேற்சொன்ன ஹதீஸுக்கு நீங்கள் முன்வைத்துள்ள கருத்தும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது.
அதாவது, இறைத்தூதர் அவர்கள் பாரசீகத்தின் அரசியையே குறிப்பிட்டார்கள். அது அதி உயர் அதிகார பீடம். எனவே கிலாபத்தின் தலைமையையே ஒரு பெண் ஏற்கக்கூடாது. அதற்குக் கீழ் உள்ள தலைமைகளை ஏற்க முடியும் என்று குறிப்பிடும் நீங்கள் ஏன் காழி என்பவர் ஒரு அதி உயர் பீடத்தில் இருப்பவராகப் பார்க்க முடியாதா? பல் வேறுபட்ட ஹதீஸ்கள் இதன் பாரதூரம் பற்றிப் பேசுவதைப் பார்க்கும் போது கிலாபத்தை ஒத்தை ஒரு அதி உயர் பதவியாகவே பார்க்க முடிகின்றதே?
அடுத்து நீங்கள் முன்வைத்துள்ள 'மேற்படி ஹதீஸ் ஒரு கருத்தைச் சொல்வதாகவும் அதிலிருந்து நாமே சட்டத்தை உருவாக்கிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளதில் இருந்து, அப்படியாயின் ஹதீஸில் இருந்து சட்டத்தை உருவாக்காமல் சட்டங்களை எதிலிருந்து உருவாக்க வேண்டும் என்ற நியதியைக் குறிப்பிடவில்லை. நாம் அறிந்த மட்டில் இமாம்கள் குர்ஆனில், ஹதீஸ்கில் இருந்ததான் சட்டங்களை இயற்றனார்கள் வேறு எதிலும் இருந்து இயற்றியதாகத் தெரியாது. அடுத்து இந்நபிமொழி ஸூரா நம்லின் 23-44 வரையிலான வசனங்களுக்கு முரண்படுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
அப்படியாயின் அல் குர்ஆன் அப்பெண்ணின் அரசாங்கத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றது என்பதா விளக்கம்?
நீங்கள் வரணிப்பது போன்று மிக நுணுக்கமான அவதானமான அரசாங்கம் செய்த அப்பெண்ணின் ஆட்சியை ஏன் நபி ஸுலைமான அலைஹிஸ் ஸலாம் அவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்? அப்படியே அதை அங்கீகரித்திருக்கலாம் அல்லவா? அவர்கள் அவர்களது ஷரீஆவின் அடிப்படையில் பெண்களது நிர்வாகத்தை அங்கீகரிக்க வில்லை என்பது இதில் இருந்து தெளிவாக வில்லையா?
அப்பெண் இறை நிராகரிப்பாளராக இருந்ததால் தான் ஆட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதாயின் இறுதியில் அப்பெண் இறைநம்பிக்கை கொண்டதாக அல் குர்ஆன் குறிப்பிடுகின்றதே அப்போதாவது மீண்டும் ஆட்சியை மீளக்கொடுத்ததாக தெரியவில்லையே? 
பெண்கள் நீதிபதிப் பதவியை ஏற்க முடியும் என்ற கருத்தை இமாம் அபூ ஹனீபா, இப்னு ஹஜ்ம் போன்றோர் கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மையில் ஹனஃபிகள் கூட குறிப்பிட்ட சில அம்சங்களில் தான் நீதிபதியாக இருக்கலாம் என்று வரையறை செய்துள்ளார்கள் என்பதை நீங்கள் ஏன் குறிப்பிட வில்லை? இப்னு ஹஜ்ம் அவர்களுடைய கருத்தை மாத்திரம் வைத்து எப்படி அனைத்து இமாம்களது கருத்தையும் ஓரங்கட்டலாம்? 
அத்துடன், விவாகப்பதிவாளாக பெண்களை நியமிப்பதில் ஷரீஆவுக்கு மாற்றமாக எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிடும் நீங்கள் இது சாத்தியமான ஒரு விடயமா என்பதை சிந்தித்துப் பாருங்கள். இன்று அதிகமாக நிக்காஹ் நிகழ்வுகள் பள்ளியில் மாத்திமல்ல ஹோட்டல்களில் கூட நடைபெறுகின்றன. அப்படியாயின் அப்பெண் எங்கிருந்து மேற்படி பதிவுகளைச் செய்வார்? மின்பருக்கு அருகாமையில் இருந்தா? அல்லது அவரது வீட்டில் இருந்தா? வீட்டில் இருந்து செய்வதாயின் நிக்காஹ் முடிந்த கையோடு மாப்பிள்ளை, வலி காரர், சாட்சிகள், நிக்காஹ் நடாத்திய மௌலவி ஆகியோர் அவரது வீட்டுக்குத்தான் போகவேண்டும். இது எவ்வளவு சிரமசாத்தியமான ஒரு விடயம் என்று சிந்தித்துப் பாருங்கள். பள்ளியிலேயே அலுவலகத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆலோசனை வேறு கொடுத்துள்ளீர்கள். எமது சமூகத்துப் பள்ளிகளில் பல இடங்களில் இமாமுக்குக் கூட சரியாக காரியாலய அமைப்பு இல்லாத நிலையில் இது சாத்தியமாகும் என்று கருதவில்லை.
எனவே அப்பெண்கள் கோரும் எதையும் தட்டிக்கழிக்காது முழுமையாக அனுமதி வழங்கும் நீங்கள் ஏன் அப்பெண்களுக்கே உரிய பணிகள், பொறுப்புக்கள் பற்றிப் போதனை செய்து அவர்களை ஆண்களோடு ஒன்றரக்கலக்கும் விடயங்களில் இருந்து அவர்களைத் தூ}ரமாக்க கூடாது என்பதுவே எனது சந்தேகங்கள் அல்லது கருத்துக்கள் என்பதை மரியாதையோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
அல்லாஹ் நம் அனைவரதும் நற்செயல்களைக் கபூல் செய்து கொள்வானாக!

அன்புடன், நாகூர் ழரீஃப்

No comments

Powered by Blogger.