Header Ads



மோடிக்குப் பாதுகாப்பு வழங்க 4 ஹெலிகெப்டர்கள் கொழும்பு வந்தன


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று கொழும்புக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் பிற்பகல் கொழும்பு வரவுள்ளார்.

சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக, இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ஏற்கனவே கொழும்பு வரத் தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக, இந்தியப்பிரதமரின் பாதுகாப்பு அணியில் உள்ள நான்கு எம்.ஐ-17 சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று புதுடெல்லியில் இருந்து கொழும்பு வந்துள்ளன.

நேற்று அதிகாலையில் விமானிகள், மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரி்கள் 49 பேருடன், புதுடெல்லியில் இருந்து இந்த நான்கு உலங்குவானூர்திகளும் புறப்பட்டிருந்தன.

நேற்றுக்காலை 8 மணியளவில் எரிபொருள் நிரப்புவதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த உலங்கு வானூர்திகள், குடியகல்வு சோதனைகளின் பின்னர், பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றன.

இந்தியப் பிரதமர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது அவரது பயன்பாட்டுக்காகவும், பாதுகாப்புக்காகவும் இந்த உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்படும்.

No comments

Powered by Blogger.