Header Ads



முஸ்லிம் பிரதேசத்துக்கு 'ஹிஜ்ரத்' வந்த புத்தரும், 2 உண்மைச் சம்பவங்களும்

-Fayas Abdul Razack-

1
சில தசாப்தங்களுக்கு முன்னர் கொலொண்ணாவ பிரதேசத்தில் வாழ்வதற்கு, இடங்கள் வாங்குவதற்கு, வியாபாரம் செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு காணிகளை விற்கக்கூடாது என்றொரு சட்டம் பெரும்பான்மை இனத்தவர்களால் இரகசியமாக பேணப்பட்டு வந்தது. எழுதப்படாத அந்தச் சட்டம் களனிய, கிரிபத்கொட, கடவத்த ஆகிய பிரதேசங்களில் இன்னமும் அமுலில் இருக்கின்றது.
அப்பொழுது, கொலொண்ணாவையில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில முஸ்லிம்கள் இருந்தார்கள். இரகசியமாக சின்னதொரு தைக்கா வீடொன்றில் இருந்தது. அதனை புனர்நிர்மாணம் செய்வதற்கும், பெயரைப் பதிவு செய்துக் கொள்வதற்கும் மா நகரசபை அனுமதிக்கவில்லை. வீதிகளில் இஸ்லாமியரல்லாதவர்கள் பகிரங்கமாக மதுபானம் அருந்தினார்கள். போதைப்பொருட்களை விற்றார்கள். நோன்பு காலத்தில் தறாவீஹ் தொழுகைக்கு தைக்காவுக்கு வந்த பெண்கள் மீது கல்லெறிந்து காடையர்கள் தொல்லை கொடுத்தார்கள். பயந்துப் போன முஸ்லிம் பெரியவர்கள் பெண்களை வீடுகளிலேயே தொழுதுக் கொள்ளுமாறு அச்சத்துடன் உபதேசம் செய்தார்கள்.
இப்பொழுது எழுபது வயதைக் கடந்த சிலர் அப்பொழுது வாலிப வயதில் இருந்தார்கள். அந்த சிலரில் குறிப்பிட்ட சிலர் பணம் படைத்திருந்தார்கள். சிலர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலும், சிலர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் அங்கத்துவம் கொண்டிருந்தார்கள். அவர்களில் அநேகர் இப்பொழுது உயிருடன் இல்லை. அப்படி பண வசதி கொண்டிருந்தவர்களை மற்ற மக்கள் தைக்காவின் பரிபாலன சபையில் அமர்த்தினார்கள். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தார்கள்.
பெரும்பான்மை இனத்தவர்களுடன் சுமுகமான உறவைப் பேணிய முஸ்லிம் தனவந்தர்கள் ஒரு காரியம் செய்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கையான சிங்கள மக்களைக் கொண்டு இப்பகுதியில் விற்பனைக்கு வந்த நிலங்களை சிங்களவர்களின் பெயருக்கு விலைக்கு வாங்கினார்கள். சில நாள்கள் செல்ல அதனை இவர்களின் பெயருக்கு மாற்றிக் கொண்டார்கள். அதற்கு சின்னதாக வெகுமதியும் கொடுத்தார்கள்.
இரண்டு அரசியல் கட்சிகளிலும் அங்கத்துவம் கொண்டவர்கள் தனவந்தர்களுடன் இணைந்து ஒரு காரியம் செய்தார்கள். கட்சி பேதமின்றி ஒன்றாக கொலொண்ணாவை பௌத்த விகாரைக்கு சென்றார்கள். அங்கு, பிரபலமான சந்தாதிஸ்ஸ தேரரை சந்தித்தார்கள். அந்தத் தேரர் நீங்கள் நினைப்பது போல சாந்தமானவர் அல்ல. மாமிசம் சாப்பிடுவார். தலைமயிரை குட்ட வெட்டியிருப்பார். சில நாள் தாடி முகத்திலிருக்கும். நாட்டின் தலைமை அதிபருடன் அவருக்கு மிக நெருக்கமான உறவிருந்தது. அந்த உரிமையில் தனது பாதுகாப்புக்காக இடையில் துப்பாக்கி வைத்திருப்பார். இந்த செய்தி அனைவருக்கும் தெரிந்திருந்தது. கொழும்பிலிருக்கும் தாதாக்களின் ஒரு பிரிவினரின் தலைமைத் தாதாவாக அந்தத் தேரர் இருந்தார். கொலொண்ணாவ சந்தாதிஸ்ஸ தேரர் ஊர் வழக்குகளை தொலைபேசியிலேயே தீர்த்து வைப்பார். கொலொண்ணாவ சந்தாதிஸ்ஸ என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் அச்சத்தில் உறைந்துப் போவார்கள். நமக்கெதற்கு வீண் வம்பு என்று ஒதுங்கிப் போவார்கள்.
சத்தாதிஸ்ஸ தேரர் தம்மைக் காண வந்த முஸ்லிம் பிரமுகர்களை வரவேற்றார். வந்தவர்களில் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தனர். தேரர் பிரச்சினைகளைக் கேட்டார். இவர்கள் அவரிடம் தமக்கு அவசியமான உதவிகளை பணிவுடன் முன்வைத்தார்கள். கொலொண்ணாவ பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் ஒன்று அவசியம் என்றார்கள். ‘சரி......செய்து தருகிறேன்’ என்று தேரர் சொன்னார். முஸ்லிம் பெண்கள் இரவில் தொழ வருகின்ற பொழுது காடையர்களின் தொல்லைகளை விட்டும் பாதுகாப்பு வேண்டுமென்றார்கள். ‘அப்படியும் நடக்கிறதா?.......காடையர்களை நான் அடக்குகிறேன்’ என்று தேரர் சொன்னார். முஸ்லிம் வியாபாரிகளுக்கு சுதந்திரமாக வியாபாரம் செய்ய அனுமதி கேட்டார்கள். ‘அதனையும் செய்துத் தருகிறேன்.’ என்று தேரர் சொன்னார். சொன்னவாறே செய்தும் தந்தார். நோன்புக் காலங்களில் காடையர்களை அவரது அடியாட்களைக் கொண்டு அடக்கினார். மேலதிகமாக இரவில் போலீஸ் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். பள்ளிவாசலை சுற்றி மதுபானங்கள் விற்பதை, அருந்துவதை தடை செய்தார்.
கொலொண்ணாவ பிரதேசத்திலிருக்கும் குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான பள்ளிவாசலின் துவக்கம் இப்படித்தான் அடித்தளமிடப்பட்டது. இன்று மத்திய கொழும்புக்குப் பிறகு அதிகப்படியான முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமாக கொலொண்ணாவை மாறியிருக்கிறது.

002
சில வருடங்களுக்கு முன்னால் மத்திய கொழும்புப் பிரதேசத்தில் ஒரு பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்து கொழும்பையே ஆட்டிப் படைத்தது. பெரும்பான்மையின பாடசாலையொன்றின் அதிபர் முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய பாடசாலை சல்வார் சீருடையை அணிவதற்கு தனது பாடசாலையில் தடை விதித்தார். அவரது பாடசாலைக்கு வருகின்ற மாணவிகள் பர்தா அணியக் கூடாது என்றும் சல்வார் காற்சட்டையைக் கழற்றி விட்டு பாடசாலை எல்லையினுள் நுழைய வேண்டுமென்றும் சட்டம் போட்டார். இந்த செயல் மெது மெதுவாக ஏனைய பாடசாலைகளிலும் பரவ ஆரம்பித்தது.
முஸ்லிம் அரசியல்வாதிகளும், இஸ்லாமிய இயக்கங்களும் மாணவிகளின் ‘பர்தா’ உரிமையைக் காக்க வரிந்துக் கட்டிக் கொண்டு கூட்டம் போட்டார்கள். திட்டம் வகுத்தார்கள். வெள்ளிக்கிழமை ஜும்மாஹ்வுக்குப் பின்னர் ‘எங்கள் உரிமைகளில் தலையிடாதீர்கள்’ என்று வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
அக்காலப் பிரிவில் கொலொண்ணாவ பிரதேசத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தார்கள். அவர்களது பெண் குழந்தைகள் கொலொண்ணாவ பாலிகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தார்கள். பாலிகா அதிபரும் மெதுவாக சீருடை சட்டத்தை தனது பாடசாலையில் கொண்டு வரத் தீர்மானித்தார்.
பள்ளிவாசல் நிர்வாக சபை அங்கத்தவர்கள் உடனடியாக ஒன்று கூடினார்கள். இப்பகுதியின் பிரதேச சபை உறுப்பினராக இருந்த மறைந்த பாரத லக்ஷ்மனை அவரது வீட்டு அலுவலகத்தில் சந்தித்தார்கள். அவர்களுடன் நானும் சென்றிருந்தேன். காலையில் வெற்றுடம்புடன் தலையில் டை அடித்த நிலையில் பாரத லக்ஷ்மன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். தற்போதைய செயார்மேன் பிரசன்ன சோலங்க ஆராச்சி அவரது காலை மஸாஜ் செய்தவாறு நிலத்தில் அமர்ந்திருந்தார். அதிகமான மக்கள் அவரைக் காண வந்திருந்தார்கள். நம்மை வரவேற்ற பாரத லக்ஷ்மன் செய்திகளைக் கேட்டார். நாம் முஸ்லிம் மாணவிகள் எதிர்கொண்டிருக்கும் சவாலை விலாவாரியாக விவரித்தோம். பாரத லக்ஷ்மன் அனைத்தையும் முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் தொலைபேசியை எடுத்தார். பாலிகா அதிபரை தொடர்பு கொண்டார். முஸ்லிம் மாணவிகளுக்கு சீருடை துணி வழங்கப் படும்பொழுது இரண்டரை மீட்டரை அதிகமாக வழங்குமாறு உத்திரவிட்டார். அதிர்ச்சியுடன் காரணம் கேட்ட அதிபருக்கு அந்த மாணவிகளுக்கு பர்தாவுக்கும், காற்சட்டைக்கும் அதிகமாக துணி தேவைப்படும். அதனால்தான் அப்படி வழங்கச் சொன்னேன் என்றார். முஸ்லிம் மாணவிகளின் ஆடை விஷயத்தில் யாருமே தேவையில்லாமல் தலையிடக்கூடாது என்றும் சொன்னார். பாலிகா அதிபர் புரிந்துக் கொண்டார். மெளனமாக கேட்டுக் கொண்டார். எதிர்த்து ஒரு வார்த்தைப் பேசவில்லை. இன்றுவரை அந்த சட்டம் கொலொண்ணாவ பாலிகாவில் அமுலில் இருக்கிறது. கொழும்பிலிருக்கும் ஏனைய பெரும்பான்மை பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் அந்தந்தப் பாடசாலை சீருடைகளைத்தான் அணிய வேண்டும். பர்தா அணிய முடியாது.

யதார்த்தம் இப்படியிருக்க, சில தினங்களுக்கு முன்னர் மாயக்கல்லிக்கு ஹிஜ்ரத் வந்த புத்தரை ஏற்றுக் கொள்ள அப்பகுதி முஸ்லிம்கள் மறுத்திருக்கிறார்களாம். அவரைத் திரும்பிப் போகச் சொல்லி போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களாம். இந்த போராட்டத்தை ‘ஜிஹாத்’ என்றும் சொல்லிக் கொள்கிறார்களாம். வந்தவர்கள் முஸ்லிம் பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொள்ளுவார்கள் என்று நமது தலைவர்கள் அச்சப்படுகிறார்களாம். பிரச்சினைக்கு இதுதான் காரணமாம். சமூக வலைத்தளங்களில் இதுதான் செய்தி.
முஸ்லிம்களின் ஆன்மீக பலத்தை யாரும் சந்தேகிக்க வேண்டிய அவசியம் இல்லை. நபிகளார் அந்த உத்திரவாதத்தை தந்திருக்கிறார்கள். கொலொண்ணாவ முஸ்லிம் குடியேற்றம் இதற்கொரு சான்று.
ஒரு உண்மையான முஸ்லிம் எந்த சூழ்நிலைகளிலும் தனது மார்க்கத்தை விட்டுக் கொடுத்து வாழ மாட்டான். மாயக்கல்லிக்கு வந்த புத்தரை வரவேற்று உபசரிக்குமாறுதான் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பனிக்கிறது. முஸ்லிம்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் முஸ்லிம் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் மக்களும் முஸ்லிம்களாகும் வாய்ப்புத்தான் அதிகம். இதுதான் வரலாறு.

3 comments:

  1. we have to get lesson on this history

    ReplyDelete
  2. இது மாய‌க்க‌ல்லியில் சிலை வைத்த‌ ஹ‌க்கீமை காப்பாற்றுவ‌த‌ற்காக‌ எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து. சிலையை வைத்தால் முஸ்லிம்க‌ள் ம‌த‌ம் மாற‌மாட்டார்க‌ள் என்ப‌து சொல்லித்தெரிய‌ வேண்டிய‌தில்லை. ஆனால் இது முஸ்லிம்க‌ளின் காணிக‌ளை அத்து மீறி ஆக்கிர‌மிக்கும் செய‌ல். அர‌ச‌ பின்புல‌ம் இல்லாம‌ல் வைக்க‌ப்ப‌ட்டிருந்தால் வேறு விட‌ய‌ம். ஆக‌வே சிறுபான்மையாக‌ முஸ்லிம்க‌ள் வாழும் கொலொன்னாவையை பெரும்பான்மையாக‌ முஸ்லிம்க‌ள் வாழும் அம்பாரையுட‌ன் ஒப்பிட‌ முடியாது. நாளை தென்னில‌ங்கை முஸ்லிம்க‌ள் விர‌ட்ட‌ப்ப‌ட்டால் அவ‌ர்க‌ள் கிழ‌க்கு வ‌ட‌க்குக்குத்தான் வ‌ர‌ வேண்டி வ‌ரும். அது வ‌ரையாவ‌து ந‌ம‌து பூமியை காப்பாற்ற‌ வேண்டும்.

    ReplyDelete
  3. There is no Religious intention in the so called statue matter. It is only a Political gimmick.If the Muslims can approach in the above mentioned way of pure Islamic, this will never be a problem. Or if the Muslim Political parties tries to have a Political mileage out of this is going to be endless sometimes.

    ReplyDelete

Powered by Blogger.