Header Ads



ஞானசாரரின் 2 ஆவது இனிங்ஸ்

(ஆதில் அலி சப்ரி)

இலங்கையின் தொல் பொருள் முக்கியத்துவமிக்க இடங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனியில் இனவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதை மலர்ந்த சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து அவதானிக்க முடிகின்றது. ஒரு நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்கள் என்பது குறிப்பிட்ட ஒரு இனத்தின் சொத்தல்ல. நாட்டின் பிரஜைகள் அனைவரும் பாதுகாக்கவேண்டிய வரலாற்று உரிமையாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

ஜனாதிபதி மைத்திரி- பிரதமர் ரணில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு 2015ஆம் ஆண்டு உதயமான அரசாங்கத்தில் இனவாதத்துக்கு இடமிருக்கப்போவதில்லை என்று சிறுபான்மையினர் பூரண நம்பிக்கை வைத்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகாக்கள்  இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் என்ற பிரசாரத்தினூடாகவே நல்லாட்சியின் உரிமையாளர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளை அபகரித்துக்கொண்டனர். அதுவரையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருந்த 95சதவீதமான முஸ்லிம்களின் வாக்குகளும் மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தையே பலப்படுத்தின.

இனவாதத்துக்கு இனியும் இடமில்லை என்பதே நல்லாட்சியின் முஸ்லிம்களுக்கான வாக்குறுதி. நல்லாட்சியின் உதயத்தோடு பல பலசேனாக்களும், பல லேக்களும் அடங்கிவிட்டதாகவே முஸ்லிம்கள் நம்பியிருந்தனர். நாட்டில் தேசிய ஒற்றுமை, சகவாழ்வு குறித்த அமைச்சொன்று உருவாக்கப்பட்டு நாட்டு மக்களின் மனங்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியும் ஆரம்பமானது. எனினும், முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதிய இனவாதம் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.  
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும்போது வெளியான அரச வர்த்தமானியை மையமாக வைத்து, நாட்டின் தொல்பொருள் முக்கியம்

வாய்ந்த இடங்களைப் பாதுகாப்பதாகவும், பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகவும் கூறிக்கொண்டு கலகொட அத்தே ஞானசார தேரரை அடிப்படையாகக் கொண்ட பொதுபல சேனா உட்பட சிங்கள பௌத்த இனவாத அமைப்புகள் மீண்டும் இனவாதத்தைக் கக்கிக்கொண்டு களத்தில் குதித்துள்ளன.  
முன்னாள் ஜனாதிபதி காலத்தில் 2014.10.10 அன்று வெளியாகிய அரச வர்த்தமானி அறிவித்தலின்படி திருக்கோவிலில் 36 இடங்களும், இறக்காமத்தில் 13 இடங்களும், அட்டாளைச்சேனையில் 11 இடங்களும், ஆலையடிவேம்பில் 9 இடங்களும், அக்கரைப்பற்றில் 6 இடங்களும், பொத்துவிலில் 5 இடங்களும், சம்மாந்துறையில் 4 இடங்களும், கல்முனையில் 2 இடங்களிலும் என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம், தமிழர்களின் 86 இடங்கள் தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 35ஆயிரம் ஏக்கர்கள் அளவில் காணியை இழக்கும் அபாயமும் உள்ளது. 
தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் நொண்டிச் சாட்டைக் கூறிக்கொண்டு பொதுபல சேனா உட்பட பௌத்த இனவாத அமைப்புகளின் கூட்டணி கிழக்குக்கு ஊர்வலமாக செல்ல முற்பட்டதே நல்லாட்சியில் இனவாதிகளின் ஆட்டத்தின் ஆரம்பமாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக  சிங்கள பௌத்த இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாக 450க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருந்ததாகவும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீதான 250க்கு மேற்பட்ட வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்திருந்தார். 

சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து இனவாதிகளின் அட்டகாசங்கள் அதிகரித்திருப்பதை அண்மையில் நடந்தேறிய சம்பவங்களை பார்க்கும்போது புரிந்துகொள்ளலாம். இனவாதிகளின் கொட்டத்தை அடக்குவதாகவும், ஏற்கனவே பதிவாகியுள்ள முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் குறித்து விசாரணைகளை நடத்துவதாகவும் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சியும், நல்லாட்சியை பலப்படுத்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனம் காக்கின்றனர். 
முஸ்லிம்களின் ஏக இறைவன் அல்லாஹ்வை பகிரங்கமாக தகாத வார்த்தைகள் கொண்டு தூற்றல், பாணந்துறை பள்ளிவாசல் தாக்குதல், கொஹிலவத்தை பள்ளிவாசல் தாக்குதல், தோப்பூர் முஸ்லிம்கள் மீதான தாக்குதல், ஓனகம முஸ்லிம் கிராமத்தில் அத்துமீறல், எலுவிலையில் முஸ்லிம் கடைகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு, தேசிய சகவாழ்வு அமைச்சில் இலங்கை பௌத்த நாடு என்பதை ஏற்க, தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரை கட்டாயப்படுத்தல், லாஸ்ட் சான்ஸ் வியாபாரஸ்தளம் எரிப்பு என்று ஞானசார தேரர் உட்பட சிங்கள இனவாதிகளின் கொட்டம் தொடர்கின்றது.

இனவாதிகளின் ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்து எங்கு? ஏது? நடக்குமோ! என்ற அச்சத்தில் முஸ்லிம்களின் நாட்கள் நகர்கின்றன. சிலர் மஹிந்த இருந்தால் கூட நடந்திராத அட்டூழியங்களும் நல்லாட்சியில் நடைபெற ஆரம்பித்துள்ளன என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.
 முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் வேடிக்கை பார்க்குமா? சட்டம் தன் கடமையைச் செய்யாமல் இருப்பதில் இருந்து இது சிங்கள பௌத்த நாடென்பதை உறுதிப்படுத்தி, சிறுபான்மையினர் அடங்கிப் போகவேண்டும் என்பதை நிரூபிக்க முற்படுகின்றதா? என்ற கேள்வி சிறுபான்மையினரின் மனதில் படிய ஆரம்பித்துள்ளது. 

2 comments:

  1. Don't need his image. When you publishing his news. Just his name is enough.

    ReplyDelete

Powered by Blogger.