Header Ads



21 முஸ்லிம் எம்.பிக்களும், அதிகாரமற்றவர்களா..?

(நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள  ஆசிரியர் தலையங்கம்)

முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அமைச்சு பதவிகளும் அனைத்து சலுகைகளும் உள்ளபோது அதிகாரம் மாத்திரம் இல்லாதிருப்பதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எல்.எப்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கஹட்டோவிட்டவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடத்திய கருத்தரங்கில் பேசும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் முஸ்லிம் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உட்பட ஏனைய சகல வசதிகளுமுள்ளன. ஆனால் இருக்க வேண்டிய அதிகாரத்தை மட்டும் இழந்திருக்கின்றோம் என்று அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கெதிராக நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிராக 21 முஸ்லிம் எம்.பிக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தாலும் எதனையும் சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நேற்று நள்ளிரவு வரை முஸ்லிம்களை இலக்காக வைத்து 18 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்று, இரண்டு, மூன்று என்று நாளாந்தம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டவண்ணமுள்ளன.

இத்தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கு பிரதான காரணம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூறியிருப்பது போன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் அதிகாரம் இல்லாமையாகும்.

225 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் இருப்புது என்பது குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. ஆனால் 21 பேருக்கும் போதிய அதிகாரமில்லாமையால் அவர்களது குரலுக்கு பதில் கிடைக்காதிருக்கின்றது.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டிருப்புது போன்று முஸ்லிம்கள் மத்தியிலே நிலவும் ஓற்றுமையின்மை காணப்படும் வரை இந்த அதிகாரத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெறுவது கடினமானதே.

நடக்கும் சம்பவங்கள் பற்றி ஆராய்வதற்கு கடந்த வெள்ளியன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலிமின் ஏற்பாட்டில் ஒன்று கூடினர். உடனே ஜனாதிபதியையும், பிரதரையும் சந்திப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

ஆளும்கட்சியிலே 21 முஸ்லிம் உறுப்பினர்களிருந்தும் மூன்று நாட்களாக சந்திப்புக்கான நேரத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் முஸ்லிம் எம்.பிக்கள் இருக்கிறார்கள். தொலைபேசி மூலம் பேசி நேரத்தை பெற வேண்டிய முஸ்லிம் எம்.பிக்கள், அமைச்சர்கள் 21 பேரும் கையொப்பம் திரட்டுவதிலீடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் முஸ்லிம் எம்.பிக்கள் மத்தியில் அதிகாரம் இல்லாமையே.

முஸ்லிம் எம்.பிக்கள் அதிகாரத்தை எப்படி பெறுவது என்பது தொடர்பாகத் தீர சிந்திக்க வேண்டும். தேவை ஏற்படின் பதவிகளிலிருந்து விலகுவதற்கு கூட தயக்கம் காட்டக்கூடாது. துணிச்சலான தீர்மானங்களை எடுக்காது இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீளுவது
கடினமானதே!

1 comment:

Powered by Blogger.