Header Ads



பங்களாதேஷை தாக்கியது ‘மோரா’ 10 இலட்சம் மக்கள் வெளியேற்றம்

வங்க கடலில் உருவான ‘மோரா’ புயல் நேற்றுக் காலை பங்களாதேஷ் கடல்பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதனால் சுமார் 10 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

வங்க கடலில் உருவான ‘மோரா’ புயல் சின்னம் கொல்கத்தாவுக்கு தெற்கு- தென்கிழக்கே 750 கி.மீட்டரிலும், பங்களாதேஷின் சிட்டகாங்குக்கு தெற்கு-தென்மேற்கே 640 கி.மீற்றர் தூரத்திலும் நேற்றுமுன்தினம் மையம் கொண்டிருந்தது.

இது மேலும் வலுவடைந்து புயலாக உருமாறியது. இந்த நிலையில் நேற்றுக்காலை 6 மணிக்கு பங்களாதேஷின் காஸ் பசாருக்கும் சிட்டகாங்குக்கும் இடையே கரையை கடந்தது.

அப்போது மணிக்கு 117 கி.மீற்றர் வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. பலத்த காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.

மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயல் தாக்குவதற்கு முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையோரம் தாழ்வான பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 10 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு அரசு அமைத்துள்ள பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணியில் பொலிசார், இராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

No comments

Powered by Blogger.