Header Ads



அரசாங்கத்திற்கு இரட்டைமுகம் - சாடுகிறது NFGG

காணாமலாக்கப்பட்டவர்களின் விடயத்தில் நீதியை நிலைநாட்டக் கோரியும் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இன்று (27.04.2017) வியாழக் கிழமை வடக்கு கிழக்கு பகுதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு தாமும் ஆதரவளிப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

"காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி உண்மையை கண்டறியுமாறு வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தொடராக போராட்டங்கள் தமிழ்  மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் பல நாட்களாக இம் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருவது கவலைக்கும் கண்டனத்துக்குமுரியதாகும்.

சிறுபான்மை மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், அவர்களது விடயத்தில் சர்வதேசத்துக்கு ஒரு முகத்தையும் உள்நாட்டில் இன்னொரு முகத்தையும் காட்டுவது விசனிக்கத்தக்கதாகும். அரசாங்கத்தின் இந்த இரட்டை நிலைப்பாட்டை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

நல்லிணக்கம் என்ற போர்வையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டாலும் அவை வெற்று வார்த்தைகளாகவே இருக்கின்றன. பிரதமர் அலுவலகத்தால் அமைக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான செயலணியின் அறிக்கையை கூட அரசாங்கம் முறையாக கையேற்க முன்வராமை அதன் இரட்டை நிலைப்பாட்டை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.

எனவேதான் போரின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நியாயமான பிரச்சினைகள், கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். குறிப்பாக காணமலாக்கப்பட்ட தமிழ்-முஸ்லிம் மக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களது உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று இராணுவத்தினராலும் அரசாங்கத்தினாலும் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவதுடன் இன்றைய இந்த போராட்டத்திற்கு எமது ஆதரவையும் வெளிப்படுத்துகிறோம்"

No comments

Powered by Blogger.