Header Ads



'ஸ்மார்ட் போன்' உபயோகிப்பவரா நீங்கள்..? ஏற்படும் பாதங்கள்..!

‘ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாகிவிட்டது. இனிமேல் அதைத் தவிர்க்க முடியாது. அதனால், அதை ஸ்மார்ட்டாக உபயோகப்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக் கொண்டால் போதும். அளவோடு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவது அவசியம் என்பதைப் போலவே, எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் சில வழிகள் இருக்கின்றன’’ என்கிறார் இயன்முறை மருத்துவர் கிரீஷ்குமார்.

‘‘ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்தும்போது பெரும்பாலும் குனிந்த நிலையில்தான் கழுத்தை வைத்திருக்கிறோம். இதனால் கழுத்தைச் சுற்றியுள்ள தசைகள், எலும்புகள், நரம்புகள், எலும்பு இணைப்பு களுக்கு இடையேயுள்ள டிஸ்க்குகள் ஆகியவற்றுக்கு பிரச்னைகள் ஏற்படும்.இயற்கையாக நம் கழுத்தின் அமைப்பு தலையின் எடையைத் தாங்குவதற்கு ஏதுவாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. நிமிர்ந்த நிலையில் நம் காதின் நடுப்பகுதியும், தோள்களின் நடுப்பகுதியும் ஒரே நேர்கோட்டில் இருந்தால்தான் நம் கழுத்து நல்ல நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

நீண்ட நேரம் குனிந்த நிலையிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் இயற்கையான இந்த கழுத்து அமைப்பு மாறுபட்டு கழுத்து முன்னோக்கி வளைகிறது. இதனால் கழுத்து தசைகள், நரம்பு கள், எலும்புகள், டிஸ்க்குகள் போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு ‘Text Neck’ என்று பெயர். இதனால் 60 வயதுகளில் கழுத்து எலும்பில் வரக்கூடிய பிரச்னைகள் 20 வயதிலேயே வந்துவிடும்.

இத்துடன் நீண்ட நேரம் குனிந்த நிலையிலேயே இருப்பதால் முன் கழுத்து தசைகள், நெஞ்சு பகுதி தசைகள், வழக்கத்துக்கு மாறாக இறுக ஆரம்பிக்கின்றன. எந்த ஒரு தசை இழுபட்ட நிலையில் நீண்ட நாட்கள் இருக்கிறதோ, அது தன் பலத்தை சிறிது சிறிதாக இழக்க ஆரம்பிக்கும். நம் கழுத்து தசைகள்தான் தூண்(Pillar) போன்று நம் தலையின் எடையைத் தாங்குகிறது. ஏற்கெனவே கூறியது போன்று பின்கழுத்து தசைகள் வலுவிழப்பதனால் இந்த தசைகளுக்கு தலையின் எடையை தாங்கும் திறன் குறைகிறது.

இதனால் நம் கழுத்து தசைகள் தாங்க வேண்டிய தலையினுடைய எடையும் சேர்த்து நம் கழுத்து எலும்புகள் தாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் ஆரம்பத்தில் கழுத்தை சுற்றியுள்ள தசைகளில் வலி, தலைவலி போன்ற பிரச்னைகள் உருவாகும். இதை சரி செய்யாமல் தொடர்ந்து பல மணி நேரம் கழுத்தை குனிந்த நிலையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் தோள்பட்டை  வலி, கைகளில் நரம்பு வலி, கைகள் மரத்துப்போதல், தலைசுற்றல், வாந்தி உணர்வு, தூக்கமின்மை, மனப்பதற்றம் போன்ற அறிகுறிகள் தென்படும்.

எனவே, உட்கார்ந்த நிலையில், கண்களுக்கு முன்பாகவே சற்று தொலைவில் வைத்து ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதே நிலையில் தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்ற காரணத்தால், இயற்கையாகவே நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்துவிடுவோம். மல்லாந்து படுத்த நிலையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது தலையை பக்கவாட்டில் வளைக்காமல் நேராக வைத்து கண்களுக்கு நேராக சற்று தொலைவில் வைத்துப் பயன்படுத்தலாம்!’’

No comments

Powered by Blogger.