Header Ads



இலங்கையில் ஒரு கிராமத்தையே, வாட்டிவதைக்கும் சிறுநீரக வியாதி

-கே.வசந்தரூபன்-

வவுனியா, தட்டான்குளம் கிராமத்தில் சிறுநீரக நோயால் நூறுக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதுடன் அண்மையில் கூட இருவர் மரணமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

"வவுனியா, வெண்கல செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள தட்டான்குளம் கிராமத்தில் எம்மைக் குடியேற்றினர். யுத்தம் காரணமாக கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து 1995 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இடம்பெயர்ந்த எம்மை வவுனியா பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைத்தனர்.

எம்மை மீள்குடியேற்றுவதற்காக தட்டான்குளம் பகுதி தெரிவு செய்யப்பட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்டோம். 135 குடும்பங்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் சிறுநீரக நோயால் நூறுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளாந்தம் கூலிவேலை செய்து எமக்கு கிடைக்கும் கொஞ்சப் பணத்தில் கூட நிம்மதியாக சாப்பிட முடியாமல் நாளாந்தம் மருத்துவ பரிசோதனைக்காகவும், மருத்துகளைப் பெறுவதற்காகவும் அடிக்கடி வவுனியா வைத்தியசாலைக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் தான் நாம் வாழ்கின்றோம்.

பலருடைய வீடுகளில் கிணறுகளிலும், குடிமனைக்குள்ளும் குழாய்க் கிணறுகளும் இருக்கின்றன. இருந்தும் அந்த நீரை வாயில் வைத்து பார்க்க முடியாத நிலையே இங்கு உள்ளது. அந்த நீரில் கல்சியம் உள்ளிட்டவற்றின் செறிவு அதிகமாக உள்ளது. இதனால் அந்த நீரின் மூலம் சிறு நீரக நோய் பலரையும் வாட்டி எடுத்துள்ளது. குழந்தைகள், பாடசாலை செல்லும் சிறுவர்கள் எனப் பலர் இருந்தும் அவர்கள் கூட அந்த நீரையே குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட நீர் அருகில் இல்லை. அதனை காசு கொடுத்து பெறுவதற்கும் எம்மிடம் பணம் இல்லை.

இதனால் எமது கிராமத்து நீரால் நோய் வரும் எனத் தெரிந்தும் அதனையே பருக வேண்டிய இக்கட்டான நிலையில் வாழ்கின்றோம்.

மக்கள் பிரதிநிதிகள், வடமாகாணசபை, செட்டிகுளம் பிரதேச சபை மற்றும் அரச அதிகாரிகள் இது தொடர்பில் ஆக்க பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை"

இவ்வாறு அவர்கள் பரிதாபமாகத் தெரிவித்தனர்."

மக்கள் பிரதிநிதிகள் ஏதோவெல்லாம் அரசியல் பேசுகின்றனர். ஆனால் எம்மைப் பற்றிக் கவலைப்பட எவருமே கிடையாது" என்கின்றனர் அம்மக்கள்.

No comments

Powered by Blogger.