Header Ads



இந்தியாவுக்காகவே புலிகளுடன் போரிட்டேன் – மகிந்த ராஜபக்ச

விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாம் இந்தியாவுக்காகவே போரை நடத்தியதாகவும் இந்தப் போருக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது என்றும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போரில், சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்கள், பயிற்சி, மற்றும் விமானங்களை சீனா, பாகிஸ்தானிடம் இருந்து பெற்றது. அந்த நேரத்தில் இந்தியாவிடம் நீங்கள் உதவி கோரினீர்களா, அவ்வாறு கோரியிருந்தால் அதற்கு புதுடெல்லி எவ்வாறு பதிலளித்தது? என்று மகிந்த ராஜபக்சவிடம், புதுடெல்லி ஊடகம்  கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு மகிந்த ராஜபக்ச, “ஆனால் அவர்கள் எமக்கு உதவினர். நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால், நான் உங்களுடைய போருக்காகவே சண்டையிட்டேன். உண்மையில் இந்தியாவினுடைய போர், என்னுடைய போர் அல்ல.

விடுதலைப் புலிகள் உங்களின் பிரதமர் ராஜீவ் காந்தியையும், பல பொதுமக்களையும், இந்தியாவில்,  உங்களுடைய மண்ணிலேயே கொலை செய்தனர். அந்த வகையில் இது என்னுடைய போர் மாத்திரம் அல்ல.  அது இந்தியாவினுடைய போர்.

இது மனிதாபிமானப் போராக இருந்தது. இந்தியா சாத்தியமான எல்லா வழிகளிலும் எமக்கு உதவியது. ஊடகங்களிடம் அதிகமாக கூறி, நாங்கள் அதனை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.

சீனா மாத்திரமல்ல, பிரித்தானியா, அமெரிக்காவும் கூட போரின் போது எமக்கு உதவின.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.