Header Ads



ரசாயன ஆயுதங்கள் வீசப்பட்ட இடத்தில், சிரியா விமானப் படைகள் இன்று மீண்டும் தாக்குதல்

சிரியா நாட்டில் சமீபத்தில் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் அந்நாட்டு விமானப் படை இன்று மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர்.

சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள பல முக்கிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐக்கியநாடுகள் சபை போன்றவை மிக காரசாரமான கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிரியா நாட்டு விமானப்படை தளத்தின்மீது நேற்று அமெரிக்கா பயங்கரமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. சிரியாவின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் இந்த அதிரடி தாக்குதலை நடத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷைராத் விமானப்படை தளத்தின்மீது அமெரிக்க போர் விமானங்கள் 59 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் விமானப்படைத் தளம், போர் விமானங்கள் மற்றும் அங்கிருந்த பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை தீக்கிரையாயின. அங்கிருந்த 9 வீரர்களும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், முன்னர் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்திய ஷெய்குன் நகரத்தில் அந்நாட்டு விமானப் படை இன்று மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இன்றைய தாக்குதலை நடத்தியது சிரியா நாட்டுக்கு சொந்தமான போர் விமானமா?, அல்லது, ரஷியா நாட்டு போர் விமானமா? என்பது தொடர்பான உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை தொடர்பான விவரங்களும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த அசுரத்தனமான தாக்குதலுக்கு சிரியா அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டிவரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாகவும், சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் அதிரடிக்கு எதிராகவும் ரஷியா எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து அவசரமாக ஆலோசிப்பதற்காக ரஷிய நாட்டின் மந்திரிசபை இன்று மாலை கூடுகிறது. 

No comments

Powered by Blogger.