Header Ads



மீதொட்டமுல்ல அனர்த்தத்தில், தன் சகோதரியை பறிகொடுத்த சமீலாவின் வாக்குமூலம்..!

(எம்.சி.நஜிமுதீன்)

மீதொட்டமுல்ல சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்கள் தமது வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தனது சகோதரியை இழந்த ஒருவரின் வாக்குமூலம்

எனது சகோதரி எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தவர். எனினும் அவரின் அரவணைப்பு விரைவில் அறுந்துபோகும் என நான் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆகவே எனது இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டே சகோதரியின் இழப்பைத் தாங்கிக்கொண்டிருப்பதாக மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தத்தில் தனது மூத்த சகோதரியை பறிகொடுத்த சமீலா என்பவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

கடந்த சித்திரைப் புத்தாண்டு தினம் எமது வாழ்க்கையில் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது. அதிலிருந்து மீளுவது இலகுவான விடயமல்ல. தேகாரோக்கியத்துடன் இருந்த எனது சகோதரி திடீரென மண்ணுக்குள் புதைந்து விட்டார். 

எனினும் அவருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் பாடசாலைக்கச் செல்கின்றனர். அவர்களை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.  சகோதரியின் இழப்புக்கு எவ்வளவு நஷ்டஈடு கொடுத்தாலும் அதன் மூலம் நாம் திருப்திப்படப்போவதில்லை. ஏனெனில் அவர் எனக்கு விலை மதிக்க முடியாத ஒருவர். 

மேலும் தாய்மீது அளவு கடந்த அன்புகொண்டுள்ள அவரது இரு பிள்ளைகளையும் சமாதானப்படுத்தி வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.