Header Ads



மஸ்தானுக்கு தமிழ் சகோதரரின் கடிதம்

நான் வவுனியாவை பிறப்பிடமாக கொண்டவன். கடந்த பொதுத் தேர்தலில் தங்களுக்கே வாக்களித்தவன். அதே போன்று மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட விக்னேஸ்வரன் ஐயா, முதலமைச்சராக வரவேண்டுமென ஆசைப்பட்டு அவரின் வெற்றிக்காக உழைத்தவன்.  ஏனெனில் அபிவிருத்தி ஒரு புறம் இருக்க தமிழர்கள் இழந்த உரிமையை பெறவேண்டுமென்பதே எனது ஆசையாகும். 

தேர்தலில் புதுமுகமாக இருந்ததாலும் வவுனியா மண்ணைச் சேர்ந்தவராக, நீங்கள் இருந்ததாலுமே, எம்.பி யாகி தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஏதாவது செய்வீர்கள் என்ற நம்பிக்கையிலேயே மத வேறுபாடுகளுக்கு அப்பால் மொழியால் ஒன்றுபட்டு இருந்த காரணத்தால் உங்களுக்கு வாக்களித்தேன். அனால் தேர்தல் முடிந்து சுமார் இரண்டு வருடங்களாகியும் வவுனியா மாவட்டத்திற்கு குறிப்பாக தமிழ்ப் பிரதேசத்துக்கு உங்கள் சேவை கிடைக்கவில்லை என்பதை மிகவும் மன வேதனையுடன் தெரிவிக்கின்றேன். பத்திரிகைகளில் மட்டும் உங்கள் அறிக்கைகளையும், பேச்சுக்களையும் பார்க்கின்றோம். 

“மாவட்ட அபிவிருத்தி குழுவில் இணைத்தலைவராக இருப்பதையிட்டு மிகவும் வெட்கப்படுகின்றேன்” என நீங்கள் பேசியிருகின்றீர்கள். வாஸ்தவம்தான், நீங்கள் வெட்கப்பட்டுக் கொண்டு இருக்காமல் இணைத்தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதே மேலானது. அதை விடுத்து ஏனைய இணைத்தலைவர்களை குறைகூறிக் கொண்டிருப்பதில் எந்தப்பயனும் இல்லை.

 ஏனெனில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐந்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியல்  செய்பவர். தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பேரினவாதத்துடன் முரண்பட்டு அரசியல் செய்து வரும் அவர், யார்ப்பாணத்துக்கு வரும் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளையும் சந்திக்க வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அவ்வாறான ஒருவரை அடிக்கடி மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களை கூட்ட வேண்டுமெனவும் அவர் அதில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனவும் எதிர்பார்ப்பது நியாயமில்லை. 

தமிழர்கள் மைத்திரி அரசாங்கத்தை நம்பியதன் விளைவை இன்று அனுபவிக்கின்றார்கள். மைத்திரியின் கட்சியில் நீங்கள் ஒரு எம்.பியாக இருந்த போதும் கேப்பாபிலவு மக்களின் பிரச்சினைக்காக எப்போதாவது அவருடன் கதைத்து இருக்கிறீர்களா? வில்பத்து வர்த்தமானி பிரகடனத்தால் மன்னார் மக்கள் படுகின்ற அவதிகளையும் முள்ளிக்குள கிறிஸ்தவ மக்களின் வாழ்விடங்களை இராணுவம் சுவீகரித்ததனால் எழுந்துள்ள சீரழிவுகளையும் நீங்கள் எப்போதாவது உங்கள் கட்சி தலைவரான ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க எப்போதாவது முயற்சித்துள்ளீர்களா?

மைத்திரி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் என தெரிந்தும் அவருக்காக இன்னும் புகழ்ந்து பேசும் ஒரு எம்.பி யாகவே நீங்கள் காலம் கடத்துகிறீர்கள். கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் அவர்களே, அடுத்தவரை விமர்சித்துக் கொண்டிருக்காமல் எம்.பி பதவிக்காலத்தில் ஏதாவது உருப்படியாக செய்யப்பாருங்கள். உங்கள் கட்சித்  தலைவரிடம் இந்த விடயங்களை எடுத்துகூறி தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்தால் உங்களுக்கு கடவுள் நன்மை தருவார்.

“இறைவனின் ஆசி உங்களுக்குக் கிட்டுவதாக”

இங்கனம்,

 K ஜெயபாலன் – கோவிக்குளம், வவுனியா

3 comments:

  1. வாக்களித்த வாக்காளன் என்ற உரிமையும் ஒரே மொழி பேசும் இனம் என்ற வகையிலும் சகோதரனின் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.அதேவேளை மாவட்ட அபிவிருத்தி கூட்டத்துக்கு விக்னேஸ்வரன் கலந்து கொள்வது மிகவும் அவசியம்.

    ReplyDelete
  2. தான் வாக்களித்த அரசியல்வாதியிடம் அதற்கான இலாபங்களை அடைந்துகொள்ள நினைப்பது ஒரு வாக்காளனின் நியாயமான கோரிக்கையே மஸ்தான் இதனை கருதிட்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  3. But he is busy with fault finding

    ReplyDelete

Powered by Blogger.