Header Ads



மிகப்பெரிய சேவையை செய்பவராக, ஹிஸ்புல்லாஹ் திகழ்கிறார் - சபாநாயகர் புகழாரம்

புத்தர் ஒரு போதும் இனவாதத்தினையும், மத வாதத்தினையும், பற்றி பேசவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருட அரசியல் பதிவுகள் அடங்கிய “கிழக்கின் வாசல்” நூல் வெளியீட்டு விழா இன்று -10- காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் அவ்வாறில்லாமல் சுமூகமான ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தினை உருவாக்கி அதனூடாக மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாம் எடுத்திருக்கின்றோம்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அதில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டு அதனூடாக சிறந்த ஜனநாயக தேர்தல் முறை உருவாக்கப்பட்டு ஜனநாயக அடிப்படையில் மக்களின் மனசாட்சிக்கு ஏற்றால் போல மக்கள் வாக்களிக்க கூடிய நிலையை வழங்க முடிந்துள்ளது.

நாட்டை புதிய பாதையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. 1948ஆம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் அடைந்தது. தமிழ் முஸ்லிம் சிங்களவர் அனைவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் ஒத்துழைப்புடன்தான் சுதந்திரமடைந்தது.

இந்த நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவைகளுக்கு ஒரு போதும் இடமளிக்க கூடாது.
அனைவரும், ஒற்றுமையுடன் கருணையுடன், பாசத்துடனும் நடந்து கொண்டு இந்த நாட்டை வெற்றியடையச் செய்ய வேண்டும்.

புத்தர் ஒரு போதும் இனவாதத்தினை மத வாதத்தினை பற்றி பேசவில்லை. நான் ஒரு பௌத்த மதத்தினை பின் பற்றுபவராக இருக்கின்றேன். இனவாதம் மதவாதத்தினை தோற்கடித்து இந்த நாட்டை வெற்றிகொள்ளச் செய்ய நாம் அனைவரும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும்

ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற உறுப்பினராகவோ, இராஜாங்க அமைச்சராகவோ, அல்லது பிரதியமைச்சராகவோ இருந்தாலும் சரி, எந்த அமைச்சை பொறுப்பெடுத்தாலும் நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய சேவையை செய்யும் ஒருவராக ஹிஸ்புல்லாஹ் திகழ்கின்றார்.

சிறந்த கல்விமானாகவும் ஹிஸ்புல்லாஹ் திகழ்கின்றார். தீர்க்க தரிசனமுள்ள ஒரு அரசியல் தலைவராக பார்க்கப்பட வேண்டிய ஒருவராக ஹிஸ்புல்லாஹ் இருக்கின்றார். அவரின் சேவை இந்த நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும் என மேலும் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி மற்றும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹ்மான், மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந் குமார் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.