Header Ads



சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில், அதிரடி மாற்றங்கள்..!

களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை நடுவர்களே களத்தை விட்டு வெளியேற்ற அனுமதியளிப்பது உட்பட, சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகளை நிர்ணயிக்கும் ‘மெரில்போன்’ கிரிக்கெட் சங்கமே இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி:

• களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை அந்த ஆட்டத்தை விட்டு தற்காலிகமாகவோ, குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ விலக்கிவைக்கும் அதிகாரம் நடுவருக்கு உண்டு.

• இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நடுவர்கள் விரும்பினால் எதிரணியினருக்கு ஐந்து ஓட்டங்களைக் கொடுக்கலாம்.

• வீரர் ஒருவரை வெளியேற்ற அவ்வணித் தலைவர் மறுக்கும் பட்சத்தில், எதிரணியினர் வெற்றிபெற்றதாக நடுவர்கள் அறிவிக்கலாம்.

• ஒரு முடிவுக்கு இரு அணித் தலைவர்களும் இணங்க மறுத்தால் ஆட்டத்தைக் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவிக்கலாம்.

• பந்தைச் சேதப்படுத்துவது, களத்தைச் சேதப்படுத்துவது ஆகிய இரண்டு குற்றங்களும் ஒரே வகையாகவே இனங்காணப்படும். இதுபோன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், ஒரு ஆட்டமிழப்பை செல்லுபடியற்றதாக அறிவிக்கலாம்.

• மாற்று வீரர்கள் விக்கெட் காப்பாளராகப் பணியாற்றலாம்.

• பெய்ல்களை ஸ்டம்ப்புகளுடன் பொருந்தியதாக அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம், விக்கெட் காப்பாளர்களின் கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படவுள்ளது. 

பெய்ல் தாக்கியதில் கண்கள் பாதிக்கப்பட்டதால், தென்னாபிரிக்க வீரர் மார்க் பௌச்சர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதைக் குறிப்பிட்டே இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஸ்டம்ப்புகளுடன் பொருத்தப்பட்டதாக இருப்பதால் பெய்ல்கள் கூடிய தூரம் பறந்து செல்ல முடியாததாக அமைக்கப்படும் என்றும், எவ்வாறெனினும் அவற்றின் தற்போதைய நெகிழ்வுத் தன்மையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் மேற்படி கிரிக்கெட் சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.