April 13, 2017

ஓடும் ரயிலில், வாட்ஸ்அப் உதவியுடன் பிறந்த குழந்தை


சென்ற வாரம் அஹமகாபாத்-புரி எக்ஸ்பிரஸ் சம்பவம் புது சரித்திரமே படைத்தது. 'சித்ரலேகா' என்ற கர்ப்பிணிப் பெண் அவரது உறவினர்களோடு அந்த ரயிலில் பயணித்தார். அதே ரயிலில் 'விபின் பாக்வான்ராவ் காட்ஸி' என்ற மருத்துவ மாணவரும் பயணித்தார். சித்ரலேகாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த திக்திக் நொடிகளில் கொஞ்சமும் தாமதிக்காமல் சீனியர் நண்பர்களை வாட்ஸ்அப் வாயிலாக அணுகி பிரசவம் பார்த்தார் விபின் காட்ஸி. பிறந்தது அழகான ஆண்குழந்தை. உடனே சமூக வலைதளங்களில் ஹீரோவானார் விபின். 'சூப்பர் ப்ரோ' என அவருக்கு கைகொடுத்து பேசியதிலிருந்து...

நான் 'நாக்பூர்' மெடிக்கல் காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்கிறேன். ஒரு சராசரி பேச்சிலர்தான் நானும். மஹாராஸ்டிராவில் ஸ்கூல் முடிச்சேன். அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னுதான் மெடிக்கல் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு தகுந்த மாதிரியே நான் போன அதே ட்ரெயின்ல இந்த நிகழ்வும் நடந்துச்சு. 

''ட்ரெயின்ல என்ன நடந்தது?''

ஏப்ரல் 7, நான் அக்கோலாவிலிருந்து நாக்பூருக்கு ட்ரெயின்ல போயிட்டு இருந்தேன். திடீர்ன்னு ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் ட்ரெயின் நின்றது. ஒரு கம்பார்ட்மென்டில் மட்டும் சலசலப்பு கிளம்ப, எல்லாரும் 'என்னாச்சு'னு ஒருத்தரை ஒருத்தர் பாத்துட்டு இர்ந்தோம். அப்போ நான் இருந்த கம்பார்ட்மென்டில் 'யாராவது டாக்டர் இருக்கிறார்களா?' என்று ஒருவர் கேட்டார். நான் கையை உயர்த்தினேன். உடனே என்னை ஒரு கம்பார்ட்மென்டிற்கு கூட்டிட்டுப் போனார். அங்கு ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தார். உடனே அங்கிருக்கும் ஆண்களையெல்லாம் வெளியே அனுப்பினோம். அந்தப் பெண்ணோட நிலைமை கொஞ்சம் க்ரிடிக்கலா இருந்தததால முதலில் பயந்தேன். அந்த மாதிரி நிலையில் சீனியர் டாக்டர்களின் உதவி கண்டிப்பாக தேவைப்படும்னு தோணுச்சு. காரணம், குழந்தையின் தலைக்குப் பதில் தோள்பட்டைதான் முதலில் வெளியே தெரிந்தது. பின் 240 டாக்டர்கள் இருக்கும் ஒரு வாட்ஸ்அப் க்ரூப் நினைவிற்கு வந்தது. அந்த க்ரூப்பில் இந்தப் பெண்ணின் நிலையைச் சொல்லி போட்டோக்களையும் அனுப்பினேன். சில சீனியர் டாக்டர்கள் எனக்கு கொடுத்த அறிவுரையின்படி டெலிவரி பார்த்து குழந்தையை வெளியே எடுத்தேன். ஆனால் அந்த குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்ததைப் பார்த்து எனக்கு பயம் கூடியது. பின் அந்த குழந்தையின் வாயோடு வாய் வைத்து சில முதலுதவிகளை செய்தேன். சிறிது நேரம் கழித்து குழந்தை மூச்சுவிட்டு அழத் தொடங்கியது. அதற்கு பிறகுதான் நானும் நார்மல் ஆனேன். பின் நாக்பூர் ஸ்டேஷன் வந்தவுடன் முறையான சிகிச்சை நடந்தது. 

''யாருமே எதிர்ப்பார்க்காத நேரத்துல நடந்த சம்பவம். குழந்தையோட அந்த முதல் ஸ்பரிசம் எப்படி இருந்தது?'

எல்லாவற்றுக்கும் முதலாக இரண்டு உயிர்களை காப்பாற்றிய சந்தோஷம்தான் இருந்தது. அந்தக் குழந்தையைத் தொட்டு தூக்கியவுடன் எனக்குள் வித்தியாசமாய் ஏதோ ஒரு உணர்ச்சி. அந்த குழந்தையோடு செல்ஃபி எடுத்து என் சந்தோஷத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன். ஒரு மருத்தவருக்கு இதைவிட வேறு சந்தோஷம் இருக்கவே முடியாது. நிலைமை சகஜமானவுடன் எனக்கு 3 இடியட்ஸ் (3 Idiots) படம்தான் ஞாபகத்திற்கு வந்தது.

முதலில் என் வீட்டில் யாருமே என்னை நம்பவில்லை. சில நியூஸ் சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்த பிறகுதான் நம்பினாங்க. ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. என் உறவினர்கள், நண்பர்கள், காலேஜில கூட படிக்கிறவங்கன்னு எல்லாருமே எனக்கு வாழ்த்துகள் சொன்னாங்க. அந்தக் குட்டி தேவதை இப்போ அந்தக் குடும்பத்துக்கு மட்டுமில்ல, எனக்கும் ரொம்ப ஸ்பெஷல்.

0 கருத்துரைகள்:

Post a Comment