Header Ads



மாறுகிறது ஹமாஸ், இனி யூதர்களுடன் போரில்லை, சியோனிசமே எதிரி, கட்டாரில் புதிய ஆவணம் வெளியாகிறது

பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ், 1967 எல்லையுடன் ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட பலஸ்தீன இறைமை நாடொன்றை ஏற்கும் வகையில் அதன் சாசனத்தில் மாற்றம் கொண்டுவந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் அது இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்பதை தொடர்ந்து நிராகரித்துள்ளது.

1988 ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் சாசனத்தில் முதல்முறை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி ஹமாஸ் அமைப்பின் இலக்கு மற்றும் கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

வெளியிடப்படவிருக்கும் இந்த புதிய சாசனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை லெபனானின் ஹிஸ்புல்லா ஆதரவு அல்மயதீன் தொலைக்காட்சி கசியவிட்டுள்ளது.

இதில் மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்தான் நதிக்கும் இடைப்பட்ட பகுதி பலஸ்தீன நிலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குக் கரை மற்றும் காசா பகுதியை கொண்ட நாடொன்றை ஹமாஸ் கருத்தில் கொள்வதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டபோதும், இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் மற்றும் அவர்களது சந்ததிகள் தமது சொந்த நிலத்திற்கு திரும்புவது வலியுறுத்தப்பட்டுள்ளது.

1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

“நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் இடம்பெயர்வு பலஸ்தீன பிரச்சினையின் முக்கிய காரணமாக உள்ளது” என்று ஹமாஸ் அமைப்பின் புதிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1948 அல்லது 1967 இல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிய பலஸ்தீனர்கள் அங்கு திரும்பும் உரிமை உள்ளது. இது ஒரு நியாயமான, தனிப்பட்ட மற்றும் கூட்டு உரிமை என்பதோடு சர்வதேச சட்டங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமை பிரகடனங்கள், அனைத்து தெய்வீக சட்டங்களும் இதனை வலியுறுத்துகிறது என்று ஹமாஸின் புதிய சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் ஆரம்ப சாசனத்தை போலல்லாமல், அந்த அமைப்பின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடனான தொடர்பு பற்றி என்ற குறிப்பும் இடம்பெறவில்லை. அதேபோன்று யூத மதம் மற்றும் இஸ்ரேல் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது.

ஹமாஸ் யூதர்களுடன் போரிடாது என்றும் அது ஆக்கிரமிப்பு சியோனிச திட்டத்திற்கு எதிராக போராடும் என்றும் புதிய ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்டார் தலைநகர் டோஹாவில் இடம்பெறவுள்ள மாநாடொன்றில் ஹமாஸ் அமைப்பு தனது புதிய சாசனத்தை வெளியிடவிருப்பதாக தெரியவருகிறது.

1988 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஏடுபட்டதோடு 2006 பலஸ்தீன பாராளுமன்ற தேர்தலில் வென்று காசாவில் அதிகாரத்தை கைப்பற்றியது. அது தொடக்கம் காசா இஸ்ரேலின் முற்றுகையில் இருப்பதோடு இரு தரப்புக்கும் இடையில் அடிக்கடி மோதல் நீடித்து வருகிறது.

ஹமாஸின் ஆரம்ப சாசனத்தில் இஸ்ரேலை முற்றாக அழிப்பது அல்லது கலைத்துவிடுவதற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 

2 comments:

  1. We must stand together for the freedom of our fellow Palestinian Muslims.
    What's the tangible way to bring the Israeli war criminals in front of International Criminal Court in the Netherlands ??

    ReplyDelete

Powered by Blogger.