Header Ads



ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம், மறு ஆய்வு செய்ய டிரம்ப் உத்தரவு

ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது ஈரான் நாட்டுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய, அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தலைவர் பால் ரியானுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி பயங்கரவாதத்தைப் பரப்பி வரும் நாடுகளில், ஈரான் நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியிலிருந்து விலகி நிற்பதற்கான வாக்குறுதியை ஈரான் இதுவரை நிறைவேற்றி வருகிறது. எனினும், தொடர்ந்து பயங்கரவாதத்தைப் பரப்பி வரும் ஈரானுக்கு, அந்த நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருளாதாரத் தடைகளை நிறுத்தி வைத்திருப்பது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து மறு ஆய்வு செய்யுமாறு தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் தலைமையிலான பல்வேறு துறைகளின் கூட்டுக்குழுவுக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக துறைகள் கூட்டுக்குழு ஆய்வு செய்து, தனது அறிக்கையை சமர்ப்பித்தபின், இந்த விவகாரம் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டு, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும் என்று அந்தக் கடிதத்தில் ரெக்ஸ் டில்லர்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டு, இருதரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் ஈரானுடான அணுசக்தித் திட்டத்தைக் கைவிடப்போவதாக அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் கூறி வந்தது நினைவுகூரத்தக்கது.

No comments

Powered by Blogger.