Header Ads



மற்றுமொரு கோத்தபாயவை உருவாக்க, ஜனாதிபதி திட்டமிடுகிறாரா..?

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பில்  கலந்து கொண்டு  அமைச்சர் ராஜித சேனாரட்ன  குறிப்பிட்டவை

கேள்வி:- மற்றுமொரு கோத்தபாயவை உருவாக்குவதற்காக பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியை வழங்கப்போகின்றீர்களா?
பதில்:  அப்படி இல்லை. கோத்தபாய யார் என்று உங்களுக்குத் தெரியும். கோத்தபாயவுக்கு மஹிந்த ராஜபக்ஷவே அஞ்சி கொண்டிருந்தார்.  ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமாதானம் தொடர்பாக  ஒரு குழுவினருடன்  பேச்சுவார்த்தை  நடத்திக்கொண்டிருந்த போது அங்கே  கோத்தா வந்துகொண்டிருந்தார். அதனை கண்ட மஹிந்த ராஜபக்ஷ  கோத்தபாய வருகிறார் என பதறியடித்துக்கொண்டு   கூறியதுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தவர்களை  ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டார். இவ்வாறு தான்  மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் செய்தார். எனவே  கோத்தபாய  யார் என்பது எங்களுக்குத் தெரியும். 
கேள்வி: சரத் பொன்சேகாவை நியமித்து ஆர்ப்பாட்டங்களை நிறுத்த முடியுமா?
பதில்: அவர் நிறுத்துவார்.  
கேள்வி: தொழில் சங்கங்களின்  நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயலுகின்றீர்களா?
பதில்: அரசியல் ரீதியாக செயற்படுவதற்கு அவர்களுக்கு இடமளிக்க முடியாது. 
கேள்வி: ஏன்  அரசாங்கத்தினால்  ஒழுக்கத்தை ஏற்படுத்த முடியாதா?
பதில்: இங்கு பல்வேறு விடயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். நாட்டின் பாதுகாப்பும்  முக்கியம் அதேநேரம் ஒழுக்கமும்  முக்கியம் எனவே இந்த இரண்டு விடயங்களையும் முன்னெடுப்பதற்காகவே சரத் பொன்சேகாவை நியமிக்கின்றோம். 
கேள்வி: வேலைநிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தால்  சரத் பொன்சேகா அவற்றை எவ்வாறு நிறுத்துவார்?
பதில்; அவற்றை அவர் அழகாக செய்வார்.  
கேள்வி: ஏன் பொலிஸாரைக் கொண்டு சிவில்  நிர்வாகத்தை  முன்னெடுக்க முடியாதா?
பதில்:- இராணுவத்தைக் கொண்டு செய்வதிலும் தவறில்லை  தற்போது யுத்தம் இல்லை. இராணுவமும் ஏதாவது செய்வதற்காகப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.  எனவே  அவர்களைப் பயன்படுத்துவதில்  தவறில்லை. 
கேள்வி இதன்மூலம் நாடு இராணுவமயமாகுமே?
பதில்: அவ்வாறு இல்லை.   இராணுவத்தின்  சேவைகளை பெற்றுக்கொள்வதில் தவறில்லை. 
கேள்வி:  சிவில் நிர்வாகத்தில்  இவற்றை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லையா?
பதில்:  இவற்றை  செய்வதன் மூலமே   முதுகெலும்பை  நாம் காட்டுகின்றோம். இந்த புதிய நியமனம் மூலம்    நாம் முதுகை நிமிர்த்த முடியும்.  
கேள்வி: ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமா?
பதில்: பார்ப்போம். 
கேள்வி: கோத்தா செய்ததையே  பொன்சேகா செய்வாரா?
பதில்: அப்படி இல்லை.  பொன்சேகா  கஷ்டப்பட்டவர்,  கஷ்டங்களை அறிந்தவர்.  அநீதிக்கு எதிராக அவர் செயற்படுவார். 
கேள்வி: அப்படியாயின் நாட்டில் சிவில் நிர்வாகம் வீழ்ச்சியடைந்துவிட்டதா?
பதில்:- அப்படித்தான் மக்களும் கூறுகின்றனர்.   அதனால்தான் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்கின்றோம்.  முன்னைய அரசாங்கத்தின் திருடர்களையும் கொலைகாரர்களையும் பிடிப்போம்.  
கேள்வி:  அமைச்சரவையின்  அமைச்சர்கள் அனைவரும்  இந்த யோசனையை  ஏற்றுக்கொண்டனரா?
பதில்: சிறப்பான  தீர்மானம் என்று கூறி ஏற்றுக்கொண்டனர். 
கேள்வி: சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனரா?
பதில்: சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதிதான் இந்த யோசனையையே முன்வைத்தார். 
கேள்வி: இதன்மூலம் தொழிற்சங்கங்களை அச்சுறுத்துகின்றீர்களா?
பதில்: அமைச்சரவையில் பேசப்பட்டதை கூறுகின்றேன். 
கேள்வி: பொன்சேகாவுக்கு இராணுவ தளபதி பதவி வழங்குவதற்கு பதிலாக  சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கலாமே?
பதில்: அது நல்ல யோசனை, அது தொடர்பில் நாங்கள் பேசலாம். ஆனால்    சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்கினால் அதில் பொலிஸார் மட்டுமே உள்ளடங்குவர். 
கேள்வி: குப்பை பிரச்சினைக்கு என்ன தீர்வு?
பதில்: குப்பைகளைக் கொட்டுவதற்காகத்தான் முத்துராஜவெல மற்றும் தொப்பை ஆகிய பிரதேசங்களை தெரிவு செய்தோம். ஆனால் அங்கும் குப்பைகளை கொட்டவேண்டாமென  ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மீதொட்டமுல்ல குப்பை எங்களுக்கு வேண்டாமெனக் கூறுகின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பேசுபவர்கள்  குப்பை விடயத்தில்  பிரித்து பார்க்கின்றனர்.  ஒவ்வொரு சந்தி சந்தியாக  சமஷ்டியை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர். 

No comments

Powered by Blogger.