Header Ads



ஜனாதிபதிக்கு ஓரு, திறந்த மடல்..!

(முஜீபுர் ரஹ்மான் + மீள்பார்வை)

எம் தாயக பூமியில் வாழும் மானிட வர்க்கத்தின் ஒரு குழுவினர், 1980 ஆம் ஆண்டு முதல் அல்லற்பட்டு, 1990 ஆம் ஆண்டு அகதியாகி, சொல்லொணா துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்திருப்பீர்கள் என நான் நினைக்கிறேன். 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை இவர்களின் வாழ்வில் கலங்கரை விளக்கின் ஒளிக்கீற்றுக்கூடத் தெரியாமல், அகதியாகவே வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய நாள் அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி, அகதியாக்கியவர்களின் வாழ்வு முற்றுப் பெற்றது.

பின்னர், அப்போதைய அரசாங்கமும் இம் மக்களின் பிரதிநிதிகளும் இவர்களின் வாழ்வில் ஏற்றிய ஒளி தீபம், மெழுகுதிரி என்பதை அப்பாவி மக்கள் புரிந்து கொள்ளவில்லை. இப்போதும் அன்று ஏற்றிய மெழுகுதிரி அணைந்து செல்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஏனெனில், இது அவர்களின் தாயக பூமி. அவர்களின் பரம்பரை வாழ்ந்த பூமி. எனவே, அவர்களால் இதனை தாங்கிக் கொள்ள முடியாது என்பதை இம்மக்களினதும் ஏக பிரதிநிதியாக தெரிவாகி ஜனாதிபதியாக மகுடம் சூடியுள்ள நீங்கள் நன்கு உணர்ந்திருப்பீர்கள் என நான் நினைக்கிறேன்.

பின்னர், உங்களின் தலைமையில் உருவாகிய இவ்வரசாங்கம் இம்மக்களின் வாழ்வில் அணைந்து செல்லும் மெழுகு திரியினால் ஏற்றப்பட்ட ஒளியை, நம்பிக்கை எனும் ஒளி தீபத்தை ஏற்றியது, நல்லெண்ணங்களை மக்களுக்கு மத்தியில் ஆழமாக விதைத்தது, நல்லிணக்கமும் சகவாழ்வும் இவ்வரசாங்கத்தின் தாரக மந்திரமாக இருந்தது. இந்த அழகிய வார்த்தைகளை ஆழமாக நம்பினார்கள். ஆகவே, உங்களுக்கு வாக்குகளை அள்ளி அள்ளிக் கொட்டினார்கள். இறுதியில் நீங்களுமோ, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டீர்கள். ஆனால், 1990 ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட சொந்த தாயகத்திற்கு, 2010 ஆம் ஆண்டு மிகவும் ஆனந்தத்தில் சென்றார்கள். அங்கு சென்று பார்க்கும்போதுதான் புரிந்தது, 2009 ஆம் ஆண்டே இவர்களின் சில வாழ்விடங்களை காடுகளுக்கு சொந்தமாக்கப்பட்டிருந்தது. அதனால் கதிகலங்கினார்கள். இருந்தும், இம்மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

ஏனெனில், இவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூமிகள் சீரமைக்கப்பட்டன. அங்கு வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போதுதான் இவர்களின் வாழ்வில் மீண்டும் ஒரு புயல் வீச ஆரம்பித்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அதாவது 2012 ஆம் ஆண்டு இவர்களின் முக்கிய குடியிருப்புப் பிரதேசங்கள், சீரமைக்கப்பட்ட இவர்களின் சொந்த பூமிகள், இவர்களுக்காக கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீடுகள் இருக்கின்ற பிரதேசங்கள் யாவும் காடுகளுக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. பாவம் இம்மக்கள் எதுவும் அறியாமல் அங்கும் இங்கும் தொங்கோட்டம் ஓடினார்கள். இம்மக்களின் பிரதிநிதிகளும் ஏன்னென்னமோ சொன்னார்கள் எதையெதையோ செய்தார்கள். இன்றுவரை 2012 ஆம் ஆண்டுக்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு எந்தத் தீர்வும் இல்லை, அதனால், இம்மக்களின் வாழ்வில் மிகப் பெரிய அனர்த்தம் ஏற்படப் போகின்றது என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அடித்தளமிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு, 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி ரஷ்ய பயணத்திற்கு முன்னர் நீங்கள் அனுமதி வழங்கினீர்கள். இந்த 2017ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம், 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆட்டம் கண்டிருந்த இம்மக்களின் வாழ்வில் பாரிய இடியுடன் கூடிய புயல் காற்றும் மழையும் பெய்ய ஆரம்பிக்கும் என்பதை நீங்கள் அறியாதவராக இருந்திருக்க மாட்டீர்கள். இருந்தும், அவ்வர்த்தமானியில் கையொப்பமிட்டீர்கள். இதன் மூலம் தனது தேசத்தின் ஒரு பிரிவினர் பாதிப்படைவார்கள் என்பதை ஜனாதிபதியாகிய நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லது, இவர்களை ஒரு சமூகமாக காணிக்கவில்லையா? இதன் மூலம் தாய் பூமியின் ஒரு குழுவினர்களின் உள்ளங்கள் வேதனைப்படுமே என்பதை உங்களுக்கு உணர்த்துவதிலிருந்து தடுத்தது எது? இதன் மூலம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லாட்சி ஏற்படுமா? இதனையே இம்மக்களின் பிரதிநிதிகளும் செய்கிறார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். எனவே, எங்களின் மாமன்னரே, அடிதாங்கும் இதயம் இது இடிதாங்குமா? இடிபோல எங்கள் தலைமை வந்தால் குடி தாங்குமா?

ஏன் இம்மக்களுக்கு இந்த சோதனை? இவர்கள் செய்த தவறு என்ன? 1980 ஆம் ஆண்டு முதல் அல்லல்பட்டு, 1990 ஆண்டு அகதியாகி திக்கற்று, திசைமாறிப் போய், வாழ்விழந்து சென்றது தவறா? அல்லது மீண்டும் சொந்த தாயகத்திற்கு மீள்குடியேறுவதற்காக திரும்புவது தவறா? எமக்கான தீர்வு என்ன மன்னா?. அல்லது, நல்லிணக்கத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவோம் எனக் கூறியபோது அதனைத் தாரக மந்திரமாக ஏற்று உங்களுக்கு வாக்களித்து ஜனாதிபதி எனும் சிம்மாசனம் ஏற்றியது தப்பா? சிம்மாசனம் ஏற்றிய குற்றத்திற்காக அவர்களுக்கு நீங்கள் வழங்கும் பரிசு, அவர்களின் தாயக பூமியை பறிப்பதா?

அல்லது, இவர்கள் முஸ்லிம்களாக பிறந்தது குற்றமா? இவர்கள் முஸ்லிம்களாகப் பிறந்த குற்றத்தை இவர்களின் மூதாதையர்களிடம் கூறினால், மூதாதையர்கள் பிறந்த குற்றத்தை யாரிடம் கூறுவது? அன்றும், முஸ்லிம்களாகப் பிறந்த குற்றத்திற்காகவே வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். இன்றும் அதே குற்றத்திற்காக என்றால், இம்மக்களுக்கு என்ன தீர்வு மன்னா!? இவர்கள் பெரும்பான்மை சமூகத்தவராக இருந்தால் அல்லது மாறினால் இவ்விடயத்தில் நீங்கள் என்ன தீர்வினை எடுப்பீர்கள் மன்னரே?

இவர்களுக்காக பேசுவதற்கு யாருமில்லை. இவர்களின் பிரதிநிதிகள் இவர்களது வாழ்வில் முடியுமானவரை விளையாடிவிட்டார்கள். அவர்களின் நிலை, அவர்களின் போக்கு என்பவற்றை நன்கு உணர்ந்திருப்பீர்கள், அதவும் உங்களுக்கு நன்றாகத் தெரியும் என நான் நினைக்கிறேன். எங்களின் மன்னரே… எங்கள் பிரதிநிதிகளை நாங்கள் நம்பவில்லை, அவர்களால் நாம் இழந்தது ஆயிரம் ஆயிரம். எனவே, உங்களால் மாத்திரம்தான் எங்களது தாயக பூமியை எங்களுக்கு வழங்க முடியும். இம்மடல் மூலம் உங்களுக்கு கருணை மனு ஒன்றை சமர்ப்பிக்கிறோம். எங்கள் மீது கருணை கொண்டு எங்களது தாயக பூமியை விட்டுக் கொடுங்கள். திக்கற்று திசை மாறிப்போன எங்களது வாழ்வை உயர்த்த வெளிச்ச வீடாக நின்று வழிகாட்டுவீர்கள் என்று நம்புகிறோம். நம்பிக்கையை வீணடிக்க மாட்டீர்கள், எமக்கான சிறந்த தீர்வான தாயக பூமியை வழங்குவீர்கள் என நம்பி எதிர்பார்க்கிறோம்.

வர்த்தமானி அறிவித்தலின் விளைவு:

ஜனாதிபதி ஐயா! வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு 24.03.2017 கையொப்பமிட்டுள்ளீர்கள். இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட காடுகளின் எல்லைகளை மாற்ற வேண்டுமாயின் வன பாதுகாப்பு கட்டளை சட்டத்துக்கமைய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்ட உத்தரவு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு, பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னரே மேற்கொள்ளலாம். அதற்கமைய மேற்குறித்த வனத்துக்கான உச்ச சட்டபூர்வ பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்விடயத்தை உங்களைத் தவிர வேறு யாராலும் எதனையும் செய்ய முடியாது. அப்படி யாராவது கூறுவார்களாக இருந்தால் அதில் எந்தளவு உண்மை இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நீங்ளேதான் அமைச்சர், நீங்களேதான் ஜனாதிபதி. ஆகவே, எங்கள் மீது கருணை கொண்டு எமக்கு நியாயமான தீர்வென்றை தாருங்கள்.

ஏனெனில், இவ்வர்த்தமானி… இம்மக்களின் மீள்குடியேற்றத்தை முற்று முழுதாகத் தடுக்கின்றது. இம்மக்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்கின்றது. இம்மக்களை மீண்டும் அகதி வாழ்வுக்கு பலவந்தமாக தள்ளுகிறது. இம்மக்களின் சுதந்திர நடமாட்டத்தை பறிக்கின்றது. பச்சிளங் குழந்தைகள், சிறுவர்களின் விளையாட்டை சிறையில் அடைக்கின்றது. எனவே, சிறந்த தீர்வை வழங்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.