Header Ads



ஒரு கவ(லை)ளச் சோறு..!


-இறக்காமம் பர்சானா றியாஸ்-

இயற்கையன்னை தாலாட்டும் தொட்டிற்பிள்ளைதான் இறக்காமம் என்றார்கள் 
அகம் மகிழ்ந்தோம்
இன்னும் கலை விதைகள் தூவப்பட்ட தோட்டம் என்றார்கள் 
தீவு முழுவதுமாய் துளிர்த்தோம்
வந்தோர் போனோர் எல்லாம் நினைவிலும் இனிக்கும் விருந்தென்றார்கள் 
மீண்டும் வருக என வழியனுப்பி வைத்தோம்
அந்தப் புதன் 
அன்றெல்லாம் புன்னகைத்த புதன் அது
வாங்காமத்து கந்தூரியாம் 
அதை வாங்காமல் போவோமோ
ஒரு கவளமேனும் உண்ணாது வருத்தப்பட்டுப் போவோமோ
எனச் சிந்தையில் உயர்ந்த சாதம், 
எம்மை சந்தையில் விற்றதென்ன ?
நாற்றிசையும் தலைப்புச் செய்தியானதென்ன?
காற்றுக்கு ஒதுங்கிய சருகுகளாட்டம் எம்மக்கள் ஒதுங்கியது
வைத்தியசாலையில் மட்டுமல்ல சாலையிலும்தான்
உலையிலேற்றிய அரிசிமணியாய்த் துடித்த சிறிசுகளுடன் எம் இதயமும் புழுங்கிக் கிடந்தது
விரல்நுனிவரை மிஞ்சிப்போன உயிருடன் வயோதிபர்கள் கிடந்த காட்சி கண்டு உயிரே பதறியது
கர்ப்பவறைச் சிசுக்கள் திசுக்களாய் வெளியேறியதில்
குழந்தைகள் கனவாகிப்போன தாய்மைகளின் விசும்பல் ஒருபுறமாய்,
சாதத்தின் ஒரு பருக்கையேனும் உட்கொண்டிராத எனது இருத்தலைக்கூட துயரக் காட்சிகள் துவம்சம் செய்தன
மலக்குல் மௌத் சலாமுரைத்துக் கொய்துபோன உயிர்கள் பீசபீல் வாசத்துடன் புன்னகைத்துப் பிரிந்தன
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி றாஜிஊன்
படைத்தவனுக்குரியவர்கள், அவனிடம் திரும்புவதற்கு உரித்தானவர்கள்
யா ஸமதே,
எம் முன் நெற்றி உரோமங்களை வசப்படுத்தியவனே!
எங்களை வருத்தி மகிழ்வதிலிருந்து எவ்வித தேவையுமற்றவன் நீ
எம் துன்பங்களுக்கு பகரமானதையும் இதைவிடச் சிறந்ததையும் 
நாங்கள் உரிமையுடன் கேட்க உன்னையன்றி யார் யாஸமீஃ
மாபெரும் அரியாசனம் கொண்டவனே எம்மைத் தேற்றிவிட, அதிர்ச்சியைப் போக்கிவிடத் தகுதியான வஹ்ஹாப் நீயே
உன் சோதனை சுவைத்த எம் நாவுகள் இனிப்பை உணர தயாராகிவிட்ட நிலையில்
இலையுதிர் கடந்த வசந்தத்திற்காய் காத்திருப்பதை அறியாயோ யாஹபீழே!
உன் சோதனைகள் எம் ஈமானை பலப்படுத்தட்டும் பல பாடங்களை அது கற்றுத் தரட்டும் ஆனால் அநியாயம் தண்டிக்கப்படட்டும்!
சூழ்ச்சியாளர்களுக்கெலாம் சூழ்ச்சியாளனே, உணவு வேண்டுமானால் அஜீரணமாகலாம் ஆனால் உண்மை என்றும் அஜீரணமாகாது என்ற நம்பிக்கையுடன் நாங்கள்...

No comments

Powered by Blogger.