Header Ads



சிவனொளிபாத மலையில், புத்தர்சிலை வைப்பதற்கு சிங்ஹ லே முயற்சி - பொலிஸார் தடுத்துநிறுத்தினர்

சிங்ஹ லே அமைப்பானது, சிவனொளிபாதமலையில், புத்தர் சிலை வைப்பதற்கு எடுத்த முயற்சி, நல்லதண்ணிப் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் நேற்று, பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், நல்லதண்ணி நகரிலிருந்து சினொளிபாத மலை வீதிவரை, பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. 

நேற்று அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சிங்ஹ லே அமைப்பின் யாத்திரிகர்கள், சிவனொளிபாத மலையில், புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். 

சிவனொளிபாதமலையின் இதிகட்டுமானப் பகுதி வரை புத்தர் சிலை கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் பொலிஸாரின் தலையீட்டையடுத்து, முயற்சி கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சிவபூமியானது, சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதை வலியுறுத்தும் வகையில், இவர்கள் புத்தர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய முயன்றதாக, பொலிஸார் தெரிவித்தனர். இது, இனவாதப் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றும் எனவே சிலை வைக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்யும்வரை, தாம் அவ்விடத்திலிருந்து செல்லப்போவதில்லை என்று கூறி, சிங்ஹ லே அமைப்பின் யாத்திரிகர்கள், நேற்று இரவு சிவனொளிபாத மலையின் இந்திகட்டுமான பகுதியிலேயே  தங்கியதாக, பொலிஸார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில், நேற்று இரவு வரை, பதற்றமான சூழ்நிலையே நிலவியது.

No comments

Powered by Blogger.