Header Ads



காலியில் ஸியாரம் உடைப்பு விவகாரம் - பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு மு.கா.

-பர்வீன்-

காலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு செயலாளர் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென தற்பொழுது வெளிநாடு சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  அமைச்சர் ஹக்கீமின் பணிப்பின் பேரில் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலி ஒல்லாந்தர் கோட்டை நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னிருந்தே குறிப்பிட்ட பிரதேசத்தில் இப்பெரியாரின் அடக்கஸ்தலமும், அதனை அண்டியதாக சுத்தமான குடிநீர்க் கிணறும்  காணப்படுகின்றன.

"பத்திரிமலை" என்று அழைக்கப்படும் மேற்படி ஸியாரம் சம்பந்தமாக காலி நகர பூர்வீக வரலாறு  தொடர்பில்  பேராசிரியர்  பந்து சேனகுணசேகர  எழுதியுள்ள ஆய்வு நூலிலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

எமன் நாட்டிலிருந்து ஆன்மீக நோக்கமாக இங்கு வந்த முஸ்லிம் பெரியார் ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஸியாரம் அமைந்துள்ள இடத்தை சேதப்படுத்த விஷமிகள் மேற்கொண்ட முயற்சியானது தொன்மையான முஸ்லிம்களின் மரபுரிமை சார்ந்த அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கான இன்னுமொரு சதிமுயற்சியென பலமாக சந்தேகிக்கப்படுகிறது.


1 comment:

Powered by Blogger.