Header Ads



ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும், பேரினவாதிகளாக மாற்றிவிடக்கூடாது..!

(ஹம்ஸா கலீல்)

தமிழர் உரிமைப் போராட்ட முன்னோடி தந்தை செல்வா காலமாகி நேற்றுடன் 39 வருடங்களாகிறது. இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் சிறுபாண்மை தமிழ் பேசும் மக்களின் மீது பேரினவாதிகளின் அடக்கு முறையை கண்டித்து தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக உரிமை போராட்டத்திற்கும் வயது நாற்பதை தாண்டி விட்டது.

தந்தை செல்வா இலங்கையில் எழுந்த இனப்பிரச்சினைக்கு சுயாட்சி முறையை தீர்வாகக் கோரினார். பேரினவாதிகளின் அடக்கு முறைக்கெதிராக தந்தை செல்வாவின் தொடர் அறப்போராட்டத்தினை சமாதானப்படுத்தும் விதமாக, பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்களை இலங்கை அரசு அவருடன் மேற்கொண்டது. பின் நாற்களில் இவ் வொப்பந்தங்கள் பேரினவாதிகளினால் கிழித்தெரியப்பட்டன. தமிழர் உரிமை வேண்டி தந்தை செல்வாவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், ஜனநாயக அறப்போராட்டங்கள் யாவும் தோல்வியில் முடிந்தன.

தந்தை செல்வாவின் மரணத்தின் பின் அனைத்து தமிழ் கட்சிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்றபெயரில் தனித் தமிழீழத் தீர்மானமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வந்தன. வடக்கு, கிழக்கில் இறைமை கொண்ட தன்னாட்சி அரசு அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது. 

அதன் பின்னர் தமிழர்களின் போராட்டம் அறப்போராட்டத்தில் இருந்து ஆயுதப் போராட்டமாக எழுச்சி பெற்றது. தமிழ் இயக்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் நாடு முழுவதும் பாரிய அழிவுகளையும் மனிதப் பேரவலங்களையும் ஏற்படுத்தி நான்கு தசாப்தங்களின் பின் முள்ளிவாய்க்கால் பேரழிவு யுத்தத்துடன் முடிவுக்கு வந்தது.

இன்று தமிழர் முஸ்லிம்கள் இணைந்த இலங்கை தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம், அவர்களின் இருப்பு பற்றிய கோரிக்கைகள் மற்றும் பேரினவாதிகளின் அடக்கு முறைகள் மீண்டும் எழுந்திருக்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் நான்கு தசாப்த கால போராட்டத்திற்க்கு இலங்கை அரசினால் இன்று வரை தீர்வு வழங்கப்படவில்லை. தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்கு முறைகளும் இன்று வரை குறைந்த பாடில்லை.  

சிறுபான்மை மக்களுக்கு எதிரான பேரினவாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பகிஷ்கரிப்புகள், கடையடைப்புகளினூடாக மாத்திரம் தீர்வை பெற முடியாது. அப்படி பெறமுனையும் தீர்வு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பது கடந்த கால வரலாறு எமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கிறது. 

சிங்கள பெரும்பாண்மை சமூகத்துடனும்  பெரும்பாண்மை சமூக, அரசியல் தலைமைகளுடனும் இணைந்தே எமது சமூக பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு பெறப்பட வேண்டும்.

சிங்களப் பேரினவாதிகளைப் பொறுத்தவரையில் சிறுபாண்மை மக்களுக்கு எதுவுமே கிடைக்கக்கூடாது என்பதும் அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதுமே அன்று தொடக்கம் இன்று வரை அவர்களின் நோக்கமாக இருக்கிறது. சிறுபாண்மை மக்களுக்கு நன்மை பயக்கும் சிறுதுரும்பையும் அவர்கள் எதிர்ப்பார்கள்.

இலங்கை வாழ் சிறுபாண்மை சமூகம் இன ரீதியாக அடையாளப்படுத்தும் போராட்டங்களினூடாக, பெரும்பாண்மை சமூகத்துடன் நல்லுறவை பாதிக்கும் எதிர்ப்பு கோஷங்களினூடாக, பேரினவாதிகளின் விருப்பங்களுக்கும் ஆதிக்கங்களுக்கும் இடமளித்து ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும் பேரினவாதிகளின் தரப்பாக மாற்றிவிடக்கூடாது என்பதுவே எமது கோரிக்கையாக இருக்கிறது.  

1 comment:

  1. Why suddenly Tamil speaking communities ??...
    Muslim cap changers

    ReplyDelete

Powered by Blogger.