Header Ads



விஞ்ஞான ரீதியான முதலாவது வழக்கு - பாலியல் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை

ஜேசுதாஸ் லக்ஷ்மி என்ற 12 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்து கொலை செய்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்ற குற்றவாளிக்கு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன் கடூழியச் சிறைத் தண்டனை, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுப் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 3 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ். மாவட்ட மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று குறித்த வழக்கு இன்றைய -07- தினம் தீர்ப்புக்காக  எடுத்துக்கொள்ளப்பட்ட போதே  யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன் கடூழியச் சிறைத் தண்டனை, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

நேரில் கண்கண்ட சாட்சிகள் எவரும் இல்லாமையால் விஞ்ஞான ரீதியான மரபணு அறிக்கை மற்றும் பல்வைத்திய நிபுணர் பல்கட்டு வைத்திய அறிக்கை மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து சந்தேக நபரான கந்தசாமி ஜெகதீஸ்வரனை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு 25 வருட  கடூழியச் சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் தண்டப்பணத்தை கட்டத் தவறினால் அதற்கு ஒரு வருட கடூழிச் சிறைத் தண்டனையும் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனையும் மேலும் குறித்த சிறுமியின் பெற்றோருக்கு நஷ்ட ஈடாக 10 இலட்சம் ரூபா வழங்குமாறும் குறித்த நஷ்ட ஈட்டை வழங்கத்தவறினால் அதற்கு 5 வருட கடூழிச்சிறைத் தண்டனையும் வழங்கி யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம. இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதேவேளை, யாழ்.மாவட்ட மேல் நீதிமன்றத்தில் கண்கண்ட சாட்சிகள் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியங்களும் விஞ்ஞான ரீதியான மரபணு அறிக்கை மற்றும் பல்கட்டு வைத்திய நிபுணரின் அறிக்கை  மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட முதலாவது வழக்கு விசாரணை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.