Header Ads



முகவரை நம்பி சென்ற 2 இலங்கையர்கள், ஈரான் நாட்டில் உயிரிழப்பு

வெளிநாடு  செல்வதற்காக முகவரை நம்பி சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஈரான் நாட்டில் உயிரிழந்த துர்ப்பாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு செம்மலை மற்றும் உடுப்புக்குளம் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாக ஐரோப்பியநாடு ஒன்றுக்கு செல்வதற்காக பணம்செலுத்தி 11-12-2016 அன்று உள்ளுர் முகவர் ஒருவர் ஊடாக லண்டன் நாட்டிற்கென உள்ளூர்  முகவர் வெளிநாட்டில் அதாவது லண்டனில் உள்ள முகவர் ஊடாக அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இறுதியாக குடும்பத்தினருடன் ஈரானில் இருந்து தொலைபேசியில் ‎19-12-2016 அன்று உரையாடி தாங்கள் ஈரானில் இருப்பதாகவும் அங்கிருந்து வேறு நாட்டிற்கு செல்வதாகவும் தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் 19-12-2016  அன்றிலிருந்து குடும்பத்தினருடன் எந்தவித தொடர்புகளும் அற்றநிலையில் இவர்களிற்கு என்ன நடந்தது என அறியாது குடும்பத்தார் தேடித்திரிந்த நிலையில், கடந்த 23-04-2017 அன்று இவர்களின் குடும்பத்தினர் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத்தூதரகத்துடன் தொடர்பு கொண்டபோது ஈரான் எல்லையை கடக்க முற்பட்ட இரண்டு இளைஞர்கள்  சுடப்பட்டுள்ளதாக அவர்களின் புகைப்படங்களை காண்பித்துள்ளனர்.

அப்புகைப்படங்கள் சரியான முறையில் அடையாளம் காணமுடியாத போதிலும் அவர்கள் தங்களின் வீடுகளுக்கு வந்து குறித்த இளைஞர்களின் ஏனைய புகைப்படங்களை வைத்தும் உறவினர்கள் ஊடாகவும் சுடப்பட்டு மரணமடைந்தவர்கள் மேற்படி இரு இளைஞர்களும்தான் என்பதனை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரணமடைந்தவர்கள் முல்லைத்தீவு உடுப்புக்குளத்தைச் சேர்ந்த பேரம்பலம் மைதிலிபாலன் (வயது 39) இரண்டு பிள்ளைகளின் தந்தை, முல்லைத்தீவு செம்மலையைச் சேர்ந்த விஜயகுமார் பிரசாந்த் (வயது 23)  என்பவர்களே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆவர்.

குடும்ப வறுமைகாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று உழைக்கவேண்டும் என்ற ஆவலுடன் போலி முகவர்களிடம் பணத்தைக்கொடுத்து முறையற்ற விதத்தில் வெளிநாடு செல்லமுற்பட்டு இறந்த இரு இளைஞர்களினதும் செய்திகேட்டு மேற்படி இரு கிராமங்களும் சோகத்தில் மூழ்கியுள்ளதோடு இவர்களின் உடலங்களை பெறுவதற்குக்கூட வழியற்றவர்களாய் செய்வதறியாது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.