Header Ads



மைத்திரியிடமிருந்து 25 அமைச்சர்கள் விலகுகிறார்களாம் - மஹிந்த அணி கூறுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்திருக்கும் அமைச்சர்கள் 25 பேர் இந்த வருடம் செப்டெம்பர் மாதம் மஹிந்த அணியில் இணைவர் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

நல்லாட்சியை நிறுவப்போவதாகக் கூறிக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றிய இந்த அரசு தடம்புரண்டு செல்கின்றது. தேசிய அரசு வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. எம்மைத் திருடர்கள் என்றனர். எம்மைக் கைதுசெய்யப்போவதாகவும் அவர்கள் கூறினர்.

பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் எம்மைக் கைதுசெய்கின்றனர். இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திலேயே திருட்டுத் தொழிலை ஆரம்பித்துவிட்டது. நாட்டின் பொருளாதார முதுகெலும்பான மத்திய வங்கியிலேயே இந்த அரசு கை வைத்தது. அந்த விவகாரம் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது.

சிறு சிறு குற்றங்களுக்காக எம்மைக் கைதுசெய்யும் அரசு இந்த மிகப் பெரிய திருட்டைச் செய்தவர்களை இன்னும் கைதுசெய்யவில்லை. மத்திய வங்கியுடன் அது நின்றுவிடவில்லை. ஒவ்வொரு துறையிலும் திருட்டுக்கள் தொடர்கின்றன. இந்த அரசில் இதுவரை ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களின் பெயர்களை நாம் வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து வெளியிடுவோம்.

நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது.விலைவாசிகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. மஹிந்த ஆட்சியில் விலைவாசிகள் அதிகரித்திருந்தன என்று சொல்பவர்கள் அப்போதைய நிலைமையையும் இப்போதைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நிலைமை புரியும்.

நல்லாட்சி என்று நினைத்துக்கொண்டு அரசில் இணைந்தவர்கள் இப்போது கவலைப்படுகின்றனர். மீண்டும் பழைய இடத்துக்கு திரும்புவதற்கு அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அந்தவகையில், இந்த வருடம் செப்டெம்பர் மாதம் மைத்திரி அணியில் இருந்து அமைச்சர்கள் 25 பேர் எமது மஹிந்த அணியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.

நடக்கப் போவதைப் பொறுத்திருந்து பாருங்கள் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அடே அப்பா பதவிக்கு வந்து ஆட்சி செய்ய அப்படியெல்லாம் ஒரு ஆசை!

    ReplyDelete

Powered by Blogger.