Header Ads



எர்துகான் மீது, குவிகிறது கண்டனம் - இஸ்லாமிய எதிர்ப்பு என அவர் பதிலடி


ஐரோப்பிய நாடுகளில் பேரணிகளை நடத்த முயற்சிக்கும் துருக்கி அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பலரும் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.

துருக்கியின் பேரணிகளை முடக்கிய ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து மீது துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் ‘நாஜி’ குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். இந்த கருத்து “ஏற்க முடியாதது” என்று டச் பிரதமர் மார் ரூட் அதிருப்தி வெளியிட்டதோடு, துருக்கி தனது நிலைக்கு திரும்பும் என்று நம்புவதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

எர்துவானை சந்திக்கும் திட்டத்தை டென்மார்க் தலைவர் ஒத்திவைத்துள்ளார். “துருக்கியில் ஜனநாயக கோட்பாடுகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது” என்று டென்மார்க் பிரதமர் லார்ஸ் லுக்கே கூறினார்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையிலான துருக்கியின் புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெளிநாட்டில் வாழும் துருக்கி மக்களின் ஆதரவு வாக்கை பெறுவதற்காகவே துருக்கி அரசு ஐரோப்பாவில் பேரணிகளை நடத்த முயற்சிக்கிறது.

எனினும் பாதுகாப்பை காரணம் காட்டி ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்து இவ்வாறான பேரணிகளை தடுத்தன. பிரான்ஸில் திட்டமிட்டபடி பேரணி இடம்பெற்றது.

இதில் நெதர்லாந்து ரொட்டடமில் திட்டமிட்ட பேரணியில் இரு துருக்கி அமைச்சர்கள் உரையாற்றுவது தடுக்கப்பட்டதை அடுத்து இரு நாட்டு உறவில் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒரு துருக்கி அமைச்சர் நெதர்லாந்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நெதர்லாந்தை ஒரு வாழைப்பழ குடியரசு என்று குற்றம்சாட்டிய எர்துவான், மேற்குலகில் இருக்கும் நாடுகள் இஸ்லாமிய எதிர்ப்பு கொண்டவை என்றும் அவர் சாடினார்.

துருக்கியின் புதிய அரசிலமைப்புக்காக வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

இதற்கு வெளிநாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர்களிடம் ஆதரவை பெறவே துருக்கி அரசு பிரசாரம் செய்து வருகிறது.

நெதர்லாந்தில் சுமார் 400,000 துருக்கியர் வாழ்கின்றனர்.

இதில் அதிகபட்சமாக 1.4 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட துருக்கி வாக்காளர்கள் ஜெர்மனியில் உள்ளனர். 

No comments

Powered by Blogger.