Header Ads



யாழ்ப்பாணத்தில் இன்னொரு, பலஸ்தீனம் உருவாகிறது


-முஹம்மது ராஜி-

"யாரோட இடத்துக்கு யாருடா பெயர் மாற்றுவது ...?"

எனது முகப்புத்தக கணக்கின் மெசன்ஜசர் ஊடாக வந்திருந்த கேள்வி அது . அதோடு நிற்கவில்லை .ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருந்தார் நாகரிகமாக ஆடை அணிந்திருந்த கௌரவமான வேலை பார்க்கும் அந்த தமிழ் சகோதரர் ஒருவர்.

Google map இல் யாழ்ப்பாண சோனக தெருவில் தவறான ,பிழையான பெயர்கள் இடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரையின் தாக்கம் அது .

"சோனியெல்லாம் யாழ்ப்பாண காணிகளை குறைந்த விலைகளில் விற்குதுகள் . வாங்கி வளைத்துப்போட்டால் முழு ஏரியாவையும் நம்மட கொண்ரோலுக்கு கொண்டு வரமுடியும்" ஐக்கிய இராச்சியத்தில் நான் வாழுகின்ற நகர் ஒன்றில் உள்ள கடை ஒன்றில் 10 வருடங்களுக்கு முன்னர் பிற இனத்தவர்  ஒருவர் எனக்கு தமிழ் தெரியாது என்று எண்ணி இன்னொருவரிடம்   கூறியது இப்போதும்  ஞாபகத்துக்கு வருகிறது  .

இனவாதம் ஏடுகளில் மட்டும்தான் எரிக்கப்பட்டு உள்ளனவா ? உள்ளங்களில் எல்லாம் பள்ளங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறன இந்த இனவாதமும் இன துவேஷங்களும் ..

மீள் குடியேற்றத்தில் அனாதைக்  குழந்தைகளாய் ஆக்கப்பட்டுள்ள யாழ் முஸ்லிம்கள் இன்னொரு பலஸ்தீன சரிதத்துக்கு காரணமாக இருந்து விடக்கூடாது.

அல்லாஹ்வின் பெயர்கள் கூறி அழைக்கப்பட்ட 16 பள்ளிவாசல்கள்  மற்றும்
முஸ்லிம் பெயர்கள் கொண்ட நான்கு பாடசாலைகள் முஸ்லிம் அல்லாதவர்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதை எந்த முஸ்லிமாவது விரும்புவார்களா.. ?

யாழ்ப்பாண சோனக தெரு படிப்படியாக முஸ்லீம் அடையாளத்தை இழந்து கொண்டு வருவதாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் வாழும் அப்துல் கரீம்  ஹஸ்ஸான்
கவலை பட தெரிவித்திருந்தார் .

ஓரு காலத்தில் முற்று முழுதாக முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த நகரத்தோடு அண்டி இருந்த செம்மா தெரு இப்போது முஸ்லிம்கள் கையில் இருந்து முற்று முழுதாக பறிபோய் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிகின்றன .

புதிய சோனக தெரு கிராமத்தில் மாத்திரமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக    வாழ்வதாகவும் ஏனைய பகுதிகளில் அநேக வீதிகளில் உள்ள முஸ்லிம்களின் காணிகள் மற்றும் வீடுகள் பிற இனத்தவர்களால்
கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சோனகத்தெரு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில் நூற்றுக்கு நூறு வீதமும் முஸ்லீம்களை கொண்டிருந்த யாழ்ப்பாண சோனக தெரு இன்று பண தேவை கொண்ட பல முஸ்லீம்களால்  பிற இனத்தவர்களுக்கு  விற்கப்பட்டு பறிபோய்க்கொண்டிருப்பதை
கண்ணுக்கு முன்னால் காணக்கூடியதாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன .
பலஸ்தீன பூமி நம்மிடம் இருந்து பறி போனதும் இவ்வாறுதான் என்பதை இங்கே ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது .

இன்னொரு விடயத்தை  கேள்விப்பட்ட போது
ஆடித்தான் போய்விட்டேன் .அந்த  விடயம் எனது குடும்பத்தாரும் எனக்கு தெரிந்தவர்களும் நேரடியாக சந்தித்த ஒன்றே.

பண ஆசை கொண்ட காணி புரோக்கர்கள் , வீடு வாசல்கள் ,கடைகளை யாழ்ப்பாணத்தில் கொண்ட, வெளி இடங்களில் வாழ்ந்து வருகிற யாழ் முஸ்லீம் குடும்பங்களிடம் யாழ்ப்பாண நிலவரம் குறித்து தவறான, நேர் மறையான விடயங்களை கூறி சொத்துக்களை பிற இனத்தவர்களுக்கு  விற்க தூண்டுகிற நிலை காணப்படுவதாக தெரிய வருகிறது

சகோதர சகோதரிகளே..!
பரம்பரைகளின் எண்ணிக்கை தெரியாமல்   முஸ்லிம்கள் வாழ்ந்த ஒரு மண்ணை , இலங்கையில் முஸ்லிம்கள் முதல் முதல்  குடியேறியதாக கூறப்படுகிற ஓரு பூமியை அற்ப காசுக்காக தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம் ?.

இவ்வாறான முஸ்லிம்களின் சொத்துக்கள் பறிபோவதை தவிர்க்க தனவந்தர்கள் , முஸ்லீம் அமைப்புக்கள் முன் வர வேண்டும். தவறும் பட்சத்தில் யாழ்ப்பாண சோனகதெரு இன்னொரு பலஸ்தீனமாக பறி போவது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

No comments

Powered by Blogger.