March 21, 2017

'முஸ்லிம்களை அழிப்பதற்கு, கையில் எடுத்திருக்கின்ற ஆயுதம்'

 -அல்ஹாபிழ் அபூ அஸ்பாக் அல் அதரி-    

 'இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே என்று கூறுவீராக!'' (அல்குர்ஆன் 17:88)

1400 வருடங்களுக்கு முன்னர் அருளப்பட்ட அருள்மறை அல்குர்ஆன் இன்றுவரை அதன் அசல் வடிவில் பாதுகாக்கப்பட்டு இருப்பதானது அதன் நிரந்தர அற்புதத் தன்மையை காட்டி நிற்கின்ற அதேவேளை வானிலிருந்து இறக்கியருளப்பட்ட வேதங்களில் அல்குர்ஆன் மாத்திரம் எவ்விதத் திரிபுகளுக்கும் அப்பாற்பட்டிருப்பதானது அதன் புனிதத் தன்மையையும் உலகிற்கு உரத்துச் சொல்லி நிற்கின்றது.

''யூதர்களில் சிலர் வார்த்தைகளை அதற்குரிய இடங்களில் இருந்து மாற்றுகின்றனர்.'' (அல்குர்ஆன் 4:46)

அதே போன்று இன்று கிறிஸ்தவர்களிடம் காணப்படுகின்ற ''இன்ஜீல் மத்தே'', ''மொர்கிஸ்'', ''லோகா'', ''யோஹ்னா'' போன்ற வேதங்களுக்கும் ஈஸா(அலை) அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட ''இன்ஜீல்'' வேதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஏனெனில் ''இன்ஜீல்'' வேதம் ''மத்தாஹுஸ்'', ''யோஹ்னா'', ''மார்க்ஷ்'', ''லோகா'' ஆகிய நான்கு கவாரியீன்களின் ஊடாகத்தான் பெறப்பட்டது. இதனைக் கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

''நாமே இதனை இறக்கி வைத்தோம் நாமே இதனை பாதுகாப்போம்.'' (அல்குர்ஆன் 15:9)

அல்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட உண்மையை பிரான்ஸைச் சேர்ந்த கீழைத்தேய அறிஞர் ''மொரிஸ் புகைல்'' என்பவர் குர்ஆனின் நம்பகத்தன்மை குறித்து எவரும் தர்க்கிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அது ஏனைய வேதங்களுக்கு மத்தியில் விஷேட இடத்தை தக்க வைத்துக் கொண்டதுடன் பைபிளின் புதிய ஏற்பாடோ, பழைய ஏற்பாடோ ஒருக்காலும் குர்ஆனின் நம்பகத் தன்மைக்கு நிகராகவே மாட்டாது எனக் குறிப்பிடுகின்றார்.

மற்றும் சிறந்த விஞ்ஞானி என்ற பட்டத்தைப் பெற்ற ''ஜோன்சன்'' என்பவரும் ''தல்அபீப்'' பல்கலைக்கழக விரிவுரையாளராக கடமைபுரிகின்ற யூத வர்க்கத்தைச் சேர்ந்த ‘அவ்ரி ரூபி'' என்பவரும் அல்குர்ஆன் காலத்தால் அழியாத அற்புதம் என்பதை தங்களது நூற்களில் தெளிவாக ஒப்புக்கொண்டுள்ளனர். (பார்க்க: www.islammessage.com)இவ்வுண்மையை யூத கிறிஸ்துவ உலகம் அறியுமாயின் அவர்களில் அதிகமானோர் இஸ்லாத்தின்பால் சாரை சாரையாக வரக்கூடுமென மத ஒப்பீட்டாய்வாளர் ''அப்துர்ரஸாக்'' என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். 

இருந்த போதிலும் ''மலை நிலைகுலையாமல் இருந்தாலும் குரைத்துப் பழகிய நாய்கள் குரைக்காமல் இருப்பது அழகல்ல'' என்ற தோரணையில் இஸ்லாத்தின் விரோதிகள் அல்குர்ஆனைப் பூண்டோடு இல்லாமல் ஆக்குவதற்கு பல சதித் திட்டங்களை தீட்டிக் கொண்டே இருக்கின்றனர். காரணம் குர்ஆன்தான் முஸ்லிம்களின் உயிர். அந்த உயிரை இல்லாமல் ஆக்கினால்தான் அவர்களை உயிரற்ற ஜடங்களாக்க முடியும். இத் தந்திரோபாயத்தை எதிரிகளே தங்களது நாவுகளால் முன்மொழிந்துள்ளனர். தகவலுக்காக இங்கே சிலவற்றை சுட்டிக்காட்டுகின்றோம்.

01. பிரித்தானிய பிரதமர் ''ஜலாதிஸ்தூன்'' பொதுச்சபைக் கூட்டம் ஒன்றில் குர்ஆனைக் கரத்தில் சுமந்தவராக ''இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பதாக இருந்தால் இஸ்லாத்தின் சின்னங்களாக திகழ்கின்ற பிரதான அம்சங்களான ஜும்ஆத் தொழுகை, ஹஜ் வணக்கம், இதோ கையிலிருக்கின்ற குர்ஆன் ஆகிய மூன்றையும் இல்லாமல் செய்ய வேண்டும். (இல்லாவிடில் இஸ்லாத்தை அழிக்கவே முடியாது எனக் கூறினார்.)'' பார்க்க: www.alminbar.net/alkhutab/khutbaa.asp?media. தொடர்ந்து அவர் கூறுகையில் ‘குர்ஆன் முஸ்லிம்களின் கரங்களில் தவழும் காலமெல்லாம் ஐரோப்பா, கிழக்கை ஆக்கிரமிக்கவே முடியாது.'' எனத் தெரிவித்தார். 

02. ''வலீம் ஜீபூர் பில் கராப்'' என்ற கிறிஸ்தவ ஆய்வாளர் ''குர்ஆன் மற்றும் மக்கா, மதீனா ஆகிய புனித நகரங்கள் அரேபிய நாடுகளில் இருந்து மறைந்தால்தான் அரபுகள் வேதத்தை விட்டு தூரமாகி மேற்கு நாகரிகத்தில் மூழ்குவர்'' எனக் கூறுகின்றார்.

03. ''தாகில்'' என்ற கிறிஸ்தவ ஆய்வாளர் ''திருமறைக் குர்ஆனை (கிறிஸ்துவ சமூகமாகிய) நாம் படிப்பது எமக்கு கட்டாயக் கடமை. இஸ்லாத்தை பூண்டோடு அழிப்பதற்கு அதுதான் மிகப்பெரும் ஆயுதம்'' எனக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து கூறுகையில் ''மேற்கத்தேய மொழிகளில் பாடசாலைகளை உருவாக்கி அவற்றின்பால் முஸ்லிம்களை ஊக்குவிப்பது எமது தார்மீக பொறுப்பாகும். ஏனெனில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் மேற்கத்தேய நூற்கள், அந்நிய மொழிகளை கற்பதனால் அவர்களது கொள்கை களுக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியும்'' எனவும் குறிப்பிட்டார்.

மிக அண்மையில் பிரான்ஸில் மிகவும் அபூர்வமான ஒரு சம்பவம் இடம்பெற்றது. பிரான்ஸ் தனது நாட்டைச் சேர்ந்த 10 இஸ்லாமியப் பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கு மேற்கத்தேய ஆடைகளை அணிவித்து ''மொடல் பெண்களாக'' அவர்களை சர்வதேச மட்டத்தில் சித்தரித்துக் காட்ட விரும்பினர். அதற்காக பாரிய ஒரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டு பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள், சிந்தனையாளர்கள் என பல முக்கியஸ்தர்களும் அழைக்கப்பட்டு இருந்தனர். விழா ஆரம்பமானதும் அப்பெண்களை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்நிய சமூகங்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

காரணம் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக அந்தப் பத்து இஸ்லாமியப் பெண்களும் இஸ்லாமிய ஹிஜாபோடு விழா மண்டபத்திற்கு வருகை தந்திருந்தனர். இதனால் பிரான்ஸ் பத்திரிகைகளினூடாக பாரிய புரட்சிகள் வெடித்தன. பிரான்ஸ் பத்திரிகைகள் அனைத்தும் பொறுப்பு வாய்ந்தவர்களிடம் இது குறித்து கேள்விக் கணைகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இவற்றிற்கு விடையளிக்கப் புறப்பட்ட ‘லா கூஷ்த்’ என்பவர் பிரான்ஸ் கலாசாரத்தை விட குர்ஆனியக் கலாசாரம் மேலோங்கும் போது என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற அதிர்ச்சிகரமான ஒரு பதிலை அளித்தார். இச்சம்பவம் மேற்குலகை வியப்பில் ஆழ்த்தியதோடு மாத்திரமல்லாமல் குர்ஆனை விட்டும் முஸ்லிம்களை தூரப்படுத்த முடியாது என்ற பாடத்தையும் படித்துக் கொண்டனர்.

எனவே, மேற்குறித்த விடயங்களினூடாக எம்மால் ஒரு முடிவுக்கு வர முடிகின்றது. முஸ்லிம்களை அழிப்பதற்கு மாற்று சமூகங்கள் கையில் எடுத்திருக்கின்ற முதல் ஆயுதம் வெறும் ஏவுகணைகளும், கிளஸ்டர் குண்டுகளும் அல்ல. மாறாக, திருமறைக் குர்ஆனை திரிபுபடுத்தும் திட்டமும் ஆகும். இச் சிந்தனை இன்று நேற்று உதித்த சிந்தனையல்ல. நபிகளார் காலம் தொட்டே மக்கத்து முஷ்ரிக்குகளிடம் இருந்து வந்த நச்சுச் சிந்தனை ஆகும்.

1 கருத்துரைகள்:

Allah is the greatest of all plotters. He's suffice to us.

Post a Comment