Header Ads



விமல் வீரவன்ச தரப்பின் எம்.பி. பதவிகளை பறிப்போம் - ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்

“விமல் வீரவன்ச எம்.பி தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு தீர்மானித்தால், அம்முன்னணியின் எம்.பி பதவிகள் யாவும் பறிக்கப்பட்டுவிடும்” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.   

இதேவேளை, அந்த முன்னணியானது, கூட்டமைப்பிலிருந்து விலகினாலும் கூட்டமைப்புக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  வீரக்கெட்டிய, வலஸ்முல்ல பகுதியில், நேற்று (06) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

“கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு யாரும் இடையூறு விளைவிக்கமுடியாது. எங்களுடைய கூட்டமைப்பில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதன் பின்னர், சுயாதீனமாக இயங்குவதற்கு யாருக்கும் உரிமையில்லை” என்றார்.  “நான், ஏற்கெனவே கூறியதைப் போல, விமலின் கட்சியானது கூட்டமைப்புடன் எந்தவோர் ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.  “இந்தக் கோரிக்கை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கடந்த 2ஆம் திகதியன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சுதந்திர முன்னணியாது, கூட்டமைப்பிலிருந்து விலகுமாயின், அவர்களின் எம்.பி பதவிகளை பறிப்பதற்கும் அன்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது” என்றார்.  “எங்களுடைய பயணத்தை யாராலும் நிறுத்தமுடியாது. எம்முடன் கைகோர்த்துக் கொண்டு பயணிக்கவிரும்புவோர். இணைந்துகொள்ளலாம், பிரிந்து செல்வோர் பிரிந்தும் செல்லலாம்” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.