Header Ads



முஸ்லிம் இன விரோத சக்திகள், அரசாங்கத்தின் தொட்டிலிலே வைத்து தாலாட்டப்படுகின்றார்கள்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்காக வேண்டி தற்போதுள்ள ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்கு புதுவியூகம் அமைக்க வேண்டிய காலசூழ்நிலை இப்போது கனிந்துள்ளது. இத்தனை காலமும் மைதானத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வியூகம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ அவர்களின் குறைகளை அறிவதற்கோ எந்த விதமான உதவியும் செய்யவில்லை. ஆகவே இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்கு ஒரு பொது அணித்தலைவர் தேவைப்படுகின்றார். இன்று நாட்டிலுள்ள பெரும்பான்மையான சமூகத்தவர்கள் மட்டுமன்றி முஸ்லிம்கள் கூட இலங்கையின் பொது அணித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவை இனங்கண்டு விட்டார்கள். கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, ஓட்டமாவடி போன்ற இடங்களில் இரண்டு நாள் சுற்றுப் பிரயாணம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் உரை நிகழ்த்திய கூட்டங்களில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அரசிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் சதாவும் அரசாங்கத்தைச் சாடும் ஒரு புதுப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இதன் மூலமாக மேலும் அவர்கள் அரசினால் வஞ்சிக்கப்படுவார்களே தவிர, முஸ்லிம்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் அதனால் கிடைக்கப்போவதில்லை. எனவேதான் இத்தனை காலமும் ஆடுகளத்தில் ஆடியவர்கள் தங்களுடைய விக்கெட்டுகளை இழந்து வருகின்ற பரிதாபகரமான காட்சியைப் பார்த்து, அந்த விக்கெட்டுகளை சரி செய்து ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

அப்படி ஒன்றிணைந்து அவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது கூட்டாகவோ வந்து சந்தித்து  எதிர்கால ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக வேண்டிய வியூகத்தை சமூகத்தின் நலனுக்காக வேண்டி காலம் செல்லாது அமைக்க வேண்டும் என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆகவேதான் அந்த கள நிலவரத்தை அறிவதற்காக, முதற் கட்டமாக நாங்கள் இந்த விஜயத்தை மேற் கொண்டுள்ளோம். செல்கின்ற இடங்களிளெல்லாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முஸ்லிகளின் ஆதரவு பெருகி உள்ளதை நாம் காணக் கூடியதாக இருந்தது. இது சென்ற தேர்தலின் பிறகு ஏற்பட்டுள்ள முப்பெரும் மாற்றம். அதாவது மஹிந்த ராஜபக்ஷதான் இன்று முஸ்லிம்களுக்குத் தேவைப்படுகின்றார். அவர்தான் கிழக்கு மாகாணத்திற்கு விடிவெள்ளியை உதிக்கச் செய்தார். பாதைகளை அமைத்துக் கொடுத்தார். பாதைகளைச் புனரமைப்புச் செய்தார். காபட் வீதிகளை உருவாக்கினார். விவசாய நிலங்களுக்கு போகமுடியாத நிலையை மாற்றியமைத்தார். எந்தவிதமான அச்சமும் இல்லாமல் கிழக்கிலிருந்து கொழும்புக்குச் சென்று வியாபாரம் செய்து, மீண்டும் சுதந்திரமாக தங்களது உயிர்களைப் பாதுகாத்துக் கொண்டு கிழக்கின் இல்லங்களுக்குச் செல்வதற்கு அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவரும் மஹிந்த ராஜபக்ஷ என்பதை இன்று கூட மறக்காத மக்களாக இருக்கின்றார்கள்.

முஸ்லிம் இன விரோத சக்திகள் இப்போது அந்த அரசாங்கத்தின் தொட்டிலிலே வைத்து தாலாட்டப்படுகின்றார்கள்.  மஹிந்த ராஜபக்ஷ எந்த விதத்திலும் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை என்று நெஞ்சைத் தொட்டு கூறுகின்றார். சில பல குறைகள் நடந்தாலும் எதிர்காலத்தில் அப்படி நடக்காது என்று சமுதாயத்திற்கு உறுதி கூறுகின்றார்.

நான் ஏனைய ஊடக சந்திப்பில் கூறியது போன்று இப்பொழுதே மஹிந்த ராஜபக்ஷவை கிழக்கு மாகாணத் தலைவர்கள் வந்து சந்தித்து எதிர்கால நலனுக்கு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால்  அவர் மூலமாக நாம் இழந்த உரிமைகளைப் பெறலாம். கஷ்டங்களில் நிவர்த்தி பெறலாம். ஒரு சமாதான சூழ்நிலை ஏற்படும் என்பது திண்ணம். 

இந்த விஜயங்களுக்கு முத்தாய்ப்பு வைத்தாற் போன்று அப்துல் மஜீது முபாரக் மௌலவி ஓர் ஊடக சந்திப்பையும் ஏற்படுத்தி இருந்தார். அதில் அஸ்வர் முன்வைத்த கருத்துக்கள் முகப்புத்தகம் மூலமாக  நேரடியாக அஞ்சல் செய்யப்பட்டது. இந்த விஜயத்தின் போது மேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லாஹ் கலந்து கொண்டார். கிழக்கு மாகாணத்தின் கிராம மட்ட பல தலைவர்கள் இந்த சந்திப்பின் போது  தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்தார்கள். மஹிந்த ஆட்சி காலம் சம்பந்தமாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமான பதில்களை முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் அஸ்வர் வழங்கினார்.  மேலும் இவ்விஜயங்கள் விஸ்தரிக்கப்பட்டு எதிர்வரும் கிழமைகளில் ஆங்காங்கு பல தொகுதிகளுக்கும், கிராமங்களுக்கும்  விஜயம் செய்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

2 comments:

  1. கோடரிக் காம்புகளால் செய்யப்பட்ட தொட்டில் அது!

    ReplyDelete
  2. அண்மையில் மஹிந்த ஐயாவும் இப்படிதான் சொன்னார்...ஐஸ் ஐஸ் இந்த நாட்டில் ஊடுருவிருக்குதா என்று உங்க CID குழுவினரினால் கண்டுபிடிக்க முடியும் அனால் ஜனாசார மாத்திரம் எந்த தீவிர வாத குழுவிடம் இருந்து காசி வாங்கி இப்படி முஸ்லிம்களை சங்கடப் படுத்துறார் என்பதை யாருமே கண்டு பிடிக்க முடியாமல் இருக்கும் போதே தெரியும் ஐயா எங்களுக்கு
    பருப்பு வேகாது போங்கோ

    ReplyDelete

Powered by Blogger.